பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக தேசியச் செயலாளர்கள் நியமனம் பட்டியல் இறுதியானது இல்லை. இனிவரும் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெயர் இருக்கும் என்று கூறினார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் அவரது இல்லத்தில் இன்று (அக்டோபர் 2) சந்தித்தார். இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக தேசியச் செயலாளர்கள் நியமனம் பட்டியல் இறுதியானது இல்லை. இனிவரும் பட்டியலில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெயர் இருக்கும் என்று கூறினார்.
அப்போது, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாஜகவில் தேசியச் செயலாளர் பதவி அளிக்கவில்லை என்று கட்சியினர் இடையே வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கூறப்படுவதால், தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தமிழகத்தில் இருந்து யாருக்காவது பொறுப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். பாஜக தேசியச் செயலாளர்கள் நியமனம் பட்டியல் இறுதியானது இல்லை. இன்னும் வரவேண்டிய பட்டியல் நிறைய இருக்கிறது. அதில் வரும்” என்று கூறினார்.
இந்த சந்திப்பின்போது கூட்டணி தொடர்பாக ஏதாவது பேசப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், “இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. தேசியத் தலைவரை மாநிலத் தலைவரை சந்திக்கும்போது, நான் சில வழிகாட்டுதல்களைக் கேட்டேன். அவர் அந்த வழிகாட்டுதல்களை அளித்தார்.” என்று தெரிவித்தார்.
அதிமுகவுக்குள் நடைபெறும் உட்கட்சி பூசலை ஒரு கூட்டணி கட்சியாக எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், உட்கட்சி பூசல் நடப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கட்சியினுடைய விஷயத்தில் தலையிடுவது சரியானதாகவும் நாகரிகமாகவும் இருக்காது.
எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக பதவியேற்ற பிறகு, நிறைய பேர் கட்சியில் வந்து சேர்கிறார்கள். அடுத்த கட்சியில் இருந்து அதிகமாக சேர்கிறார்கள் என்ன காரணம்? இது எல்.முருகன் மீது உள்ள ஈர்ப்பா அல்லது நீங்கள் பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களை கட்சிக்கு அழைத்து வருகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த எல்.முருகன், “மோடி மீது இருக்கிற நம்பிக்கை. மோடி ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு மிகப்பெரிய திறமையான நல்ல ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரால் ஈர்க்கப்பட்டு மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, மோடியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இன்றைக்கு நிறைய இளைஞர்கள், பட்டியல் இன மக்கள், நிறைய திரைப் பிரபலங்கள், அதே போல மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாஜக மீது ஒரு நம்பிக்கையை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்று கூறினார்.
பாஜக தலைவர்களால் உங்களுக்கு என்று ஒரு நிகழ்ச்சி நிரல் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், “ஒரு கட்சித் தலைவர் என்ன வேலையை செய்வாரோ, நான் அந்த வேலையை செய்துகொண்டிருக்கிறேன்.” என்று கூறினார்.
அதிமுகவுடன் கூட்டணியில் பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள்? வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் பங்கு கேட்பீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு, பதிலளித்த எல்.முருகன், தேர்தல் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.