”ஆண்டாள் பிரச்சனையை முடிவுற்றதாக கருதுவோம்”, என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், தினமணி நாளிதழில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கட்டுரை எழுதியிருந்தார். அதில், வெளிநாட்டு ஆராய்ச்சியாளரின் கட்டுரையை மேற்கோள் காட்டி ஆண்டாள் குறித்து குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ஆண்டாள் குறித்து வைரமுத்து தரமற்ற வார்த்தைகளில் வைரமுத்து அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததாக இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக வைரமுத்து கூறியிருந்தார். இருப்பினும், வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ”இன்று தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் ஸ்ரீ வில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரை தரிசித்து மன்னிப்பு கோரினார். தவறிழைப்பது மனித இயல்பு. ஆனால் அவரது இச்செயலை வரவேற்று அவரைப் பொறுத்தவரை இப்பிரச்சினை முடிவுற்றாதாக கருதுவோம். இந்து ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு தொடர்க.”, என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய மற்றொரு ட்வீட்டில், “ஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம்”, என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.