மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டில் இருந்ததைவிட இந்த 3 அண்டுகளில் தற்போது ரூ.5.23 கோடி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்பது அவருடைய வேட்புமனுவில் இருந்து தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
தமிழ்நாட்டில் திங்கள்கிழமை பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று (25.03.2024) வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில், வேட்பாளர்கள் வேட்புமனு உறுதிமொழிப் பத்திரத்தில் தங்கள் சொத்துமதிப்பைத் தெரிவித்துள்ளனர். அதன்படி, தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கூட்டணி கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்களின் சொத்துமதிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, பா.ஜ.க சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ள சொந்துமதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க-வில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த நயினார் நாகேந்திரன், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகவும் பா.ஜ.க சட்டமன்றக்குழுத் தலைவராகவும் உள்ளார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவருடைய சொத்து மதிப்பு ரூ.26.71 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024-ல் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். நயினார் நாகேந்திரன் நெல்லை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.பி. கார்த்திகேயனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நயினார் நகேந்திரன் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ.வும் திருநெல்வேலி மக்களவை வேட்பாளருமான நைனார் நாகேந்திரனின் குடும்பச் சொத்து மதிப்பு மார்ச் 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துமதிப்பைவிட மார்ச் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவருடைய சொத்துமதிப்பு 19.54% அதிகரித்துள்ளது என்று வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன் குடும்பத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2021 மார்ச்சில் ரூ.26.71 கோடியாக இருந்தது. தற்போது ரூ.31.94 கோடியாக உயர்ந்துள்ளது. நாகேந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரா நாகேந்திரன் ஆகியோர் ரூ.3.84 கோடி மதிப்பிலான 800 சவரன் தங்கம் வைத்துள்ளனர். எம்.ஏ., பட்டதாரியான நயினார் நாகேந்திரன் பெயரில் நான்கு கார்கள், 1 டிராக்டர் உள்ளது. அவருக்கு ரூ.5.1 கோடி கடன் உள்ளது, 13 வங்கி கணக்குகள் உள்ளன. அதில் நான்கு கணக்குகளில் ஜீரோ பேலன்ஸ் உள்ளது.
இதன்மூலம், பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டில் இருந்ததைவிட இந்த 3 அண்டுகளில் தற்போது ரூ.5.23 கோடி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்பது அவருடைய வேட்புமனுவில் இருந்து தெரியவந்துள்ளது.
நயினார் நாகேந்திரனும் அவருடைய மனைவியும், சந்திரா ஹோட்டல், ஸ்ரீ கிருஷ்ணன் இன், சோப்ரோஸ் ஹோட்டல், லட்சுமி காயத்திரி ஹோட்டல், கல்யாணி டிரஸ்ட் மற்றும் கேஆர் டிராவல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். நயினார் நாகேந்திரன் மீது 153ஏ, 152, 504, 505 (2), 500 மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஜான்சி ராணி
நெல்லை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் ஜான்சி ராணி தனது குடும்பத்திற்கு ரூ. 3 கோடி சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது போட்டியிட்ட ஜான்சி ராணி வேட்புமனுவில் தனது குடும்ப சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி என்று தெரிவித்திருந்தார். பி.ஏ. பொருளாதாரப் பட்டதாரியான ஜான்சி ராணி, தனது பெயரிலும் அவருடைய கணவர் பி.முருகானந்தம் பெயரிலும் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 100 சவரன் தங்கம் வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் ஜான்சி ராணி தனது குடும்பத்திற்கு ரூ. 3 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே போல, நேல்லை மக்களவைத் தொகுதியில், பகுஜன் திராவிட கட்சி சார்பில் செல்வகுமார், வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலதிபர்கள் கட்சி சார்பில் சந்திரன், சுயேச்சை வேட்பாளர்கள் சின்ன மகராஜா, ராகவன், தளபதி முருகன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தென்காசி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன்
தென்காசி தொகுதியில் தமிழ்நாடு மக்கள் முன்னெற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பா.ஜ.க சின்னத்தில் போட்டியிடும் தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தென்காசியில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஏ.கே.கமல் கிஷோரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளர்கள் எஸ் கனகா, ஆறுமுகசாமி ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.