விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அருகே அரசு மணல் குவாரி அமைக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது.
இதற்கு பாரதிய ஜனதா, நாம் தமிழர் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அருகே பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலரும், மூத்தத் தலைவருமான ஹெச். ராஜா கலந்துகொண்டார். அப்போது அவர், “இந்தப் பகுதியில் மணல் குவாரி அமைப்பதால், கோவில் கெடும். இப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் விவசாயம் கூட பாதிக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய காயத்ரி ரகுராம் தொடர்பான கேள்விக்கு, “அவர் பாதிக்கப்பட்டிருந்தால் மாநில தலைமை, தேசிய தலைமையிடம் பேசியிருக்கலாம்” என்றார்.
மேலும், “தாம் கட்சிப் பிரச்னை குறித்து பொது இடத்தில் விவாதிப்பது இல்லை” என்றார். இதையடுத்து ராமநாதபுரத்தில் நரேந்திர மோடி போட்டியிடுவாரா? என செய்தியாளர்கள் வினாயெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஹெச். ராஜா, “நாட்டில் உள்ள 544 தொகுதிகளிலும் நிற்க தகுதியான நபர ஒருவர் என்றால் அது நரேந்திர மோடிதான். ராமநாதபுரத்தில் அவர் நின்றால் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவோம்.
இதுபற்றி தேசிய தலைமைதான் முடிவெடுக்கும். தற்போதுவரை அப்படி எந்தத் தகவலும் வரவில்லை” என்றார்.
இதையடுத்து பாஜக தலைவராக இருக்க அண்ணாமலைக்கு தகுதி இல்லை என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, “முதலில் மு.க. ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரியப்படுத்த வேண்டும்.
இன்பநிதிக்கு குடை பிடிப்பேன் என்கிறார். திமுக ஒரு சுயமரியாதை அற்ற இயக்கம். திமுகவுக்கு சுய மரியாதை என்பதே கிடையாது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/