Coimbatore blast prisoners: தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்களின் வயது, உடல்நிலை, மனநிலை, குடும்பம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவை விவாதத்தில் பேசினார்கள்.
கோவையில் 1998-ல் 11க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். 200க்கு மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இது கோவையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த அரசு வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு செயல்பட கூடாது என நாங்கள் வலியுறுத்த வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாளில் கார் குண்டுவெடிப்பு ஒன்று கோயம்புத்தூரில் நிகழ்ந்தது. அதை திமுக அரசு சிலிண்டர் வெடிப்பு விபத்து என இதுவரை கூறிவருகிறது.
இது திட்டமிடப்பட்ட சதி செயல். இதில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர். கோவை இன்னமும் மத அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் பிரச்னையில் இருக்கிறது.
இந்த விஷயத்தில் திமுக அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் பாதிக்கப்பட்ட இந்துக்களின் குரலாக ஒலிக்கிறோம்” என்றார்.
மேலும், “தாம் சட்டப்பேரவையில் முழுமையாக பேசிய வீடியோவை கூட வெளியிடவில்லை. அதை கேட்டாலும் தர மறுக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“