பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவர் ஆலோசனை நடத்தினா.
அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் நிலையில், அமித்ஷா இன்று தமிழகம் வந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு மதுரை வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார்.
அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் கல்லூரி நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா, மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட 18 மக்களவை தொகுதி நிர்வாகிகளுடன் பேசி விட்டு, பின்னர் ராமநாதபுரம் செல்கிறார்.
அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் முரளிதரராவ், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதற்கிடையே மதுரையில் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமான நிலைய ஓய்வறையில் அமித் ஷாவை சந்தித்து பேசினார். விஜயகாந்தை அதிமுக அணிக்கு கொண்டு வருவது குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
சென்னையில் விஜயகாந்தை ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்த நிலையில், அமித்ஷா சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.