Advertisment

முக்கிய கோவில்கள் முன்பு அக். 7-ல் தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்: ஹெச்.ராஜா ஒருங்கிணைப்பு

கோயில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 7ம் முக்கிய கோவில்களுக்கு முன்பாக பாஜக ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
BJP president Annamalai announced protest before important temples, கோயில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும், பாஜக முக்கிய கோயில்கல் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு, அண்ணாமலை, ஹெச் ராஜா, BJP announced protest before important temples, BJP demand allow devotees into temple in all days, BJP, Annamalai, H Raja, BJP news, Tamil News

அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் அக்டோபர் 7ம் தேதி காலை முக்கிய கோவில்களுக்கு முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும், இந்த ஆர்ப்பாட்டங்களை பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ஒருங்கிணைப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (அக்டோபர் 01) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழர்கள் வாழ்வோடு கலந்த இறை நம்பிக்கையின் அவசியத்தை வள்ளுவர் சொல்லும்போது கடவுள் மறுப்பாளர்களைக் கண்டிக்கிறார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

என்று வள்ளுவப் பெருந்தகை இறைவனுடைய திருவடிகளை வணங்க மறுப்பவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன் என்று தனது இரண்டாவது குறளிலேயே எடுத்துரைக்கிறார்.

திமுக அரசு புனித நாளாகக் கருதப்படும் வெள்ளி மற்றும் விடுமுறை நாளான சனி ஞாயிறு ஆகிய நாட்களில் திருக்கோயில்களை மூடுகிறது. அதை மாற்றி வாரத்தின் எல்லா நாட்களிலும் திருக்கோவில்களைத் திறக்க வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிப்போனது. கோவில்களுக்குச் சென்று கடவுளை வழிபடுவது தமிழர்கள் வாழ்வியலின் ஒரு பகுதி ஆகும், தடுக்க நினைப்பது தீய எண்ணத்தின் சதியாக இருக்குமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நம் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69% ஏறத்தாழ 89 கோடி பேர் ஒருமுறையாவது தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள். மத்திய அரசின் பெருமுயற்சியால், இலவச தடுப்பூசியால் நம் நாடு தற்போது பாதுகாப்பாக இருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் உணவகங்கள் சாலை போக்குவரத்து என்று எல்லாம சரளமாக நடைபெறும்போது, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் வார நாட்களில் மூடுவது வஞ்சக எண்ணமாகத்தான் இருக்குமே தவிர அதற்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது.

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை மூன்று நாட்கள் தடுத்து நான்காவது நாள் திங்கள்கிழமை அதிக கூட்டத்தை வேகமாக அனுமதிப்பதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கின்றோம் என்று திமுக அரசு கூறுவதை யாரும் ஏற்க முடியாது. இதில் கொஞ்சமும் உண்மை இல்லை. திமுகவுக்காக கட்டுக்கதைகளை வடிவமைக்கும் நபர்களைக் கலந்து ஆலோசித்து புதிதாக வேறு ஒரு நல்ல பொய்யை, அவர்கள் கேட்டுப் பெறலாம்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடிய திமுக பிறக் தன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி வாரத்தின் அனைத்து நாட்களிலும் டாஸ்மாக்கை திறப்பதற்கு காட்டும் அவசரத்தை, கண்டாலே நமக்கெல்லாம் விளங்கிவிடும். திமுக ஆட்சி தற்போது, எந்த முதலைகளின் கட்டுபாட்டில் இயங்குகிறது என்பது காவல்துறையினர் கடமையாற்ற பல்வேறு கண்ணியமான பணிகள் எதிர்நோக்கி இருக்கும்போது ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் கால்கடுக்க அவர்கள் காவல் நிற்பதைப் பார்க்கும்போது நாங்கள் வெட்கப்படுகிறோம்.

கோவில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட விலைமதிப்புள்ள பழமையும் பாரம்பரியமும் மிக்க புனிதமான ஆபரணங்களை உருக்கு அதை தங்கக் கட்டியாக்கி அதிலும் பணம் சம்பாதிக்க நினைக்கிறது திமுக அரசு. தமிழக அரசின் திருக்கோயில் பராமரிப்பு அறாநிலையமாக நடக்க வேண்டுமே தவிர அரசாங்கத்தின் வணிக நிறுவனமாக நடக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் மூலம், புரிகிறது, கடவுள் இலலி என்ற கடவுள் மறுப்பு தத்துவத்தின் அடிப்படையிலே இயங்குகிறா திமுக அரசு கடவுளை வழிபடுபவர்களுக்கு தன்னாலான எல்லாவிதமான இடைஞ்சல்களையும் தொல்லைகளையும் தரத் தயங்காது. ஆனால், எத்தனை தொல்லைகள் தந்தாலும்கூட ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கும்” அருளைப் பெற்றவர்கள் தமிழர்கள். தமிழர்களை கோவிலுக்குச் செல்லாமல் தடுக்க முடியாது.

கோவிட் தொற்று நோயை, கோவில் திறக்காததற்கு காரணமாக சொல்வது நகைப்பிற்குரிய செயல், மாற்று மதங்களின் இறை வழிபாட்டு தளங்கள் எந்த இடையூறும் இல்லாமல் எல்லா நாட்களிலும் அரசின் மறைமுக ஆதரவுடன் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க பல சான்றுகள் உள்ளன. ஆகவே திமுக அரசு தன் ஒரு சார்பு அரசியல் நிலைப்பாட்டையே தன் அரசின் நிலைப்பாடாகவும் தொடர்வது தெளிவாகிறது. திருக்கோயிலை நம்பியிருக்கும் சிறு குறு வியாபாரிகள் தேங்காய் பூ பழம் விற்பவர்கள் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. செவிடன் காதில் ஊதிய சங்காக, கேளா மடந்தையாக, ஒரு சாராருக்கு உடந்தையாக இருக்கும் அரசினால் இந்த ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்டோபர் 7ம் தேதி காலை 11 மணி அளவில் முக்கிய கோவில்களுக்கு முன்பாக பாஜகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்.

தமிழ் சமுதாயமே உங்கள் அனைவரையும் உணர்வுப்பூர்வமாக அழைக்கிறேன். நடுநிலை தவறி, மக்களின் நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படும், மக்கள் உணர்வை மதிக்காத இந்த அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட அனைவரும் எங்களுடன் இணைந்து செயல்படுங்கள் அனைத்து நாட்களிலும் திருக்கோயில்கள் திறக்க வேண்டும். அதுவும் நவராத்திரி பண்டிகை நெருங்குவதால் உடனே திறக்க வேண்டும். என் தமிழ் சகோதர சகோதரிகளே இந்தப் போராட்டத்திற்கு பிறகும் அரசு நம் கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால், இதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்ற பாஜக தயங்காது. அரசின் அடக்குமுறையைக் கண்டு அச்சம் எமக்கு இல்லை. திமுக அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்குவோம். இந்தப் போராட்டத்தை நமது முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஒருங்கிணைக்கிறார்.

அனைவரும் உங்கள் நல்லாதரவை நல்கி வரும் ஏழாம் தேதி நடைபெற இருக்கும் இந்த போராட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொண்டு அரசை திகைக்க வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp H Raja Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment