முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அவரை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டது குறித்து, ‘செந்தில் பாலாஜியை தியாக சீலர் ஆக்கியதுதான் திராவிட மாடலா?’என்று பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும் சட்டவிரோத பணப்பிரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டதையடுத்து, 471 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, புழல் சிறையில் இருந்து வியாழக்கிழமை (செப்டம்பர் 26) மாலை செந்தில் பாலாஜி வெளியே வந்தார். அவருக்கு தி.மு.க தொண்டர்கள் திரளாகத் திரண்டு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, உச்ச நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவரை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆருயிர் சகோதரர் @V_Senthilbalaji அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) September 26, 2024
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட…
அந்த பதிவில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” ” என்று பதிவிட்டுள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டதைக் குறிப்பிட்டு, “செந்தில் பாலாஜியை தியாக சீலர் ஆக்கியதுதான் திராவிட மாடலா?” என்று பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை ட்வீட் இது தான்.
— Narayanan Thirupathy (@narayanantbjp) September 26, 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, யார் தியாகி? செந்தில் பாலாஜியா?
செந்தில் பாலாஜி கெட்ட கேட்டுக்கு முதலமைச்சர் பதவிக்கு இவர் பெயரும் இருந்தது என்று நீங்கள் சொன்னீர்களா இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?
செந்தில்… https://t.co/U6U6uNnUld
இது குறித்து பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை ட்வீட் இது தான்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, யார் தியாகி? செந்தில் பாலாஜியா?
செந்தில் பாலாஜி கெட்ட கேட்டுக்கு முதலமைச்சர் பதவிக்கு இவர் பெயரும் இருந்தது என்று நீங்கள் சொன்னீர்களா இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?
செந்தில் பாலாஜியின் தம்பி கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, லஞ்சம் வாங்குவது என கரூரை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று நீங்கள் குற்றம் சாட்டியது மறந்து விட்டதா?
செந்தில் பாலாஜி மீது ஆள்கடத்தல், நிலஅபகரிப்பு புகார்கள் கூறியது உண்மையா இல்லையா?
பேருந்துகளுக்காக வாங்கிய கருவியில் செந்தில் பாலாஜி ஊழல் செய்திருப்பதாக சட்டமன்றத்தில்ஆதாரத்துடன் நீங்கள் பேசியதாக சொன்னது உண்மையா இல்லையா?
பொறியியல் படித்து கொண்டிருந்த கோகுல் என்பவரை கடத்தி, கொலை மிரட்டல் செய்து, அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ததோடு, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று செந்தில் பாலாஜி மீதான உங்களின் கடுமையான குற்றச்சாட்டை மறந்து விட்டீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே?
அரசு கேபிள் டிவியில் கரூரில் பினாமிகளை வைத்து நடத்துவது செந்தில் பாலாஜி என்று நீங்கள் சொன்னது தவறா மு.க.ஸ்டாலின் அவர்களே?
போக்குவரத்து துறையில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது, நடத்துனர் பணிக்கு 3 லட்சம், மெக்கானிக் பணிக்கு 6 லட்சம் என்று கொடுத்து ஏமாந்தவர்கள் லட்சக்கணக்கானோர் என்று நீங்கள் சொன்னது உண்மையா இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?
ஆள் கடத்தல் புகார் உள்ள நபருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று நீங்கள் சொன்னதை மறந்து விட்டீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே?
செய்வதையெல்லாம் செய்து விட்டு, சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு ஆள் கடத்தல் புகாருக்கு ஆளான ஒரு நபரை, கொலை மிரட்டல் விடுத்ததாக நீங்கள் சொன்ன ஒரு நபரை, பினாமிகளை வைத்து அரசு கேபிள் நடத்துவதாக நீங்கள் குற்றச்சாட்டு கூறிய நபரை, நடத்துனர், மெக்கானிக் பணிக்கு லஞ்சம் வாங்கியதாக நீங்கள் சுட்டிக்காட்டிய ஒரு நபரை, நில மோசடி செய்ததாக நீங்கள் கூறிய நபரை உங்கள் ஆருயிர் சகோதரராக மாற்றிக் கொண்டு, அவரை தியாக சீலராக்கியது இந்த நூற்றாண்டின் மிக பெரிய காமெடி!
ஓ!!! இது தான் திராவிட மாடலோ?” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.