பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விலை உயர்ந்த ரஃபேல் வாட்ச் குறித்து தி.மு.க-வினர் கேள்வி எழுப்பிய நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த எஸ்.ஜி சூர்யா, தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரூ.14.3 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள விலை உயர்ந்த, ரஃபேல் கைக் கடிகாரத்தைக் குறிப்பிட்டு, வெறும் 4 ஆடுகளை சொத்தாக வைத்திருக்கும் அண்ணாமலைக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த ரஃபேல் வாட்ச் எப்படி வாங்கினார். வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிடுவாரா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ரசீது வெளியிடுகிறேன் என்று பதில் அளித்திருந்தார்.
இதனிடையே, தி.மு.க-வினர் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் ரஃபேல் வாட்ச்சின் விலை, சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு 4 ஆடு சொத்தாக வைத்திருக்கும் அண்ணாமலைக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் எப்படி வாங்கினார். தேசியவாதம் பேசும் அண்ணாமளை பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த வாட்ச் அணிந்திருப்பது முரணாக உள்ளது என்று விமர்சித்து வருகின்றனர்.
தி.மு.க.,வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அண்ணாமலை, “விமானத்தின் உதிரிபாகங்களால் கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல, 500 கடிகாரங்கள் மட்டுமே உள்ளன. இது ரஃபேல் சிறப்புப் கடிகாரம். ரஃபேல் விமானத்தில் பறக்க எனக்கு வாய்ப்பு கிடைக்காததால், ஒரு தேசியவாதியாக நான் கடிகாரத்தை அணிந்துள்ளேன்.
நான் வாழும் வரை கடிகாரத்தை அணிந்து கொண்டிருப்பேன்” என்று கூறினார்.
“உலகில் வேறு யார் ரஃபேல் கடிகாரத்தை வாங்குவார்கள்? ஒரு இந்தியர் மட்டுமே வாங்குவார்கள். எனவே, நான் ஒரு தேசியவாதி என்பதால் ரஃபேல் விமானத்தின் பாகங்களால் தயாரிக்கப்பட்ட டசால்ட் ஏவியேஷன் தயாரித்த கடிகாரத்தை நாட்டின் நலனுக்காக அணிந்திருக்கிறேன். நான் பிரிவினை பேசும் நபர் அல்ல” என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார்.
இந்நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த எஸ்.ஜி .சூர்யா, உதயநிதி ஸ்டாலின் ரூ.14.3 லட்சம் மதிப்புள்ள வாட்ச் அணிந்திருப்பதாக ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார்.
எஸ்.ஜி. சூர்யா அந்த ட்வீட்டில், “தி.மு.க-வின் வாரிசு உதயநிதி ஸ்டாலின் ரூ. 14.37 லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அணிந்துள்ளார். இந்த கடிகாரத்தை வாங்க அவருக்கு பணம் வந்தது? அவர் என்ன தொழில் செய்கிறார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க-வினர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் வாட்ச் குறித்து கேள்வி எழுப்புவதும் பா.ஜ.க-வினர் உதயநிதியின் வாட்ச் குறித்து கேள்வி எழுப்புவதும் என தி.மு.க - பா.ஜ.க இடையேயான மோதல் வாட்ச் சண்டையாக மாறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"