கைது செய்யப்படும்போது, அமர் பிரசாத் ரெட்டி துணியை மாற்றிக்கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை. தங்களை முன்பே துணியை மாற்றிக்கொள்ளுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர் என பா.ஜ.க மேலிடம் அனுப்பிய குழுவில் இடம்பெற்றுள்ள புரந்தேஸ்வரி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அண்ணாமலை வீடு முன் பா.ஜ.க கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், கொடிக்கம்பம் நிறுவ அனுமதி பெறாததால், கொடிக்கம்பம் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டது.
இதற்கு பா.ஜ.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சிக்குச் சொந்தமான ஜே.சி.பி மற்றும் கிரேன் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். இந்த வழக்கில் பா.ஜ.க விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அமர் பிரசாத் ரெட்டி மேலும் 2 வழக்குகளில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கைது தொடர்பாக ஆய்வு டெல்லி தலைமை குழு அமைத்தது. சதானந்த கவுடா, சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி மோகன் ஆகிய 4 பேர் அடங்கிய குழுவை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நடடா அறிவித்தார்.
இந்த குழு இரண்டு நாள் பயணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை வந்தது. இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டுக்கு சென்றனர், அடுத்ததாக திருவான்மியூரில் உள்ள எஸ்.ஜி.சூர்யா வீட்டுக்கு சென்றனர். பின்னர் பனையூரில் உள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பா.ஜ.க.,வின் கொடிக் கம்பம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டு, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பா.ஜ.க கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவத்தின் போது காயமடைந்த பா.ஜ.க ஐ.டி பிரிவு மாநிலச் செயலாளர் விவின் பாஸ்கரனையும் சந்தித்தனர்.
பின்னர் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். பா.ஜ.க பிரதிநிதிகள், ஆளுநரை சந்தித்து, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாநிலத்தில் காவல்துறையினரால், பா.ஜ.க மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் மற்றும் துன்புறுத்தல்களை எடுத்துக்காட்டி, மனு ஒன்றை அளித்தனர். மனுவில், தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பா.ஜ.க நிர்வாகிகள் கைதுச் செய்யப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தனர்.
அதைத்தொடர்ந்து, இந்தக் குழு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து. அப்போது பேசிய சதானந்த கவுடா, தி.மு.க அரசு, காவல்துறை மூலம் பா.ஜ.க.,வினருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், இதுபற்றிய புகாரை ஆளுநரிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய புரந்தேஸ்வரி, "சமூக ஊடகங்களில் ஏதாவது பதிவை பகிர்ந்தாலே பா.ஜ.க.,வினர் மீது வழக்கு பதியப்படுகிறது. எந்த அடிப்படையும் இன்றி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு போடப்படுகிறது. பா.ஜ.க தமிழ்நாட்டில் வளர்வதால் தி.மு.க அரசு பயந்து பா.ஜ.க.,வினரை குறி வைக்கிறது.
சனிக்கிழமை மாலை அமர் பிரசாத் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அமர் பிரசாத் ரெட்டியை துணி மாற்றிக்கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை. தங்களுக்கு முன்பே துணியை மாற்றிக்கொள்ளுமாறு போலீசார் கூறியுள்ளனர். அவரை உடனடியாக கூட்டிச் சென்றுள்ளனர். மாலை நேரத்தில் கைது செய்ததால், அவரால் ஜாமீன் கோரக்கூட முடியவில்லை.
அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு இணை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார் அமர் பிரசாத் ரெட்டி. பா.ஜ.க.,வின் பாதயாத்திரை சிறப்பாக நடந்து, மக்கள் கூட்டம் வருவதால் பாதயாத்திரையை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக அமர் பிரசாத் ரெட்டியை தி.மு.க அரசு கைது செய்துள்ளது.
பா.ஜ.க.,வினர் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பதிவு செய்து உடனே சிறையில் போட்டு விடுகின்றனர். ஆனால், பா.ஜ.க தொண்டர்கள் தங்களுக்கு ஏதேனும் கொடுமை நடந்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றால், புகாரை ஏற்கவோ, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவோ காவல்துறையினர் முன்வரவில்லை. பா.ஜ.க.,வினர் கட்சிப் பணியாற்றக் கூடாது என்பதற்காகவே பா.ஜ.க.,வினரைக் குறிவைக்கின்றனர்.
அண்ணாமலை வீட்டுக்கு வெளியே பா.ஜ.க கொடிக் கம்பம் அமைத்த உடனேயே அங்கு போலீசார் வந்து, பா.ஜ.கவினரை அள்ளிக்கொண்டு போய் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பா.ஜ.க.,வினர் 120 பேர் கைது செய்யப்பட்டு மொத்தமாக திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் பெண்கள். அவர்களுக்கு கழிவறை வசதி கூட இல்லை. உணவு வழங்கவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை. இதை பொறுக்கவே முடியாது. மேலும், 6 பேர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள்.
ஈ.சி.ஆர் எதிரே பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலுக்கு எதிரே பா.ஜ.க கொடி இருப்பதாக அங்குள்ள சிறுபான்மையினர் முறையிட்டதாக கூறுகின்றனர். ஆனால், பள்ளிவாசலுக்கு எதிரே தி.மு.க, எஸ்.டி.பி.ஐ கட்சிகளின் கொடிகளும் உள்ளன. அவற்றை ஏன் அகற்றவில்லை. தி.மு.க மற்றும் மற்ற கட்சி கொடிகள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன. ஆனால், பா.ஜ.க.,வின் கொடிக்கம்பம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் வீட்டை ஒட்டியே இருக்கிறது. பிறகு ஏன் அதை மட்டும் அகற்ற வேண்டும்?
மேலும், சம்பவ இடத்திற்கு உடனடியாக கமிஷனர் வந்துள்ளார். கமிஷனர் வரும் அளவுக்கு இது பெரிய பிரச்சனை கிடையாது. ஆனால், அவர் வந்ததுமே, என்ன ஏதென்று கூட கேட்காமல் ’அரெஸ்ட் பண்ணுங்க, லத்தி சார்ஜ் பண்ணுங்க, தூக்கி பஸ்ஸுக்குள்ள போடுங்க’ என்றுதான் கூறினார். கமிஷனர் வந்ததுமே சொன்ன வார்த்தைகள் இவைதான். காவல்துறை அப்பட்டமாக தி.மு.க.,வின் தொண்டர்களைப் போல செயல்படும் நிலைமை தமிழ்நாட்டில் உள்ளது.
இந்த 2 ஆண்டுகளில் பா.ஜ.க தொண்டர்களுக்கு எதிராக 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி ஆய்வு செய்துள்ளோம். இது தொடர்பான ரிப்போர்ட்டை தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுக்கு அளிப்போம். ஆளுநரை சந்தித்து புகார் மனுவை அளித்து, நிலைமை குறித்து எடுத்துரைத்தோம். ஸ்டாலின், தி.மு.க.,வுக்கு மட்டுமே முதலமைச்சராகச் செயல்படுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வராகச் செயல்படவில்லை, மற்ற கட்சியினரை பாதுகாக்க நினைக்கவில்லை" இவ்வாறு புரந்தேஸ்வரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.