சேலத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியுடன், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், ஜி.கே.வாசன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதி நடைபெற உள்ளது. மார்ச் 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, ஐ.யூ.எம்.எல், கொ.ம.தே.க ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
அதே போல, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில், எஸ்.டி.பி.ஐ, ஃபார்வர்ட் பிளாக் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
தமிழ்நாட்டில் பா.ஜ.க தனது தலைமையிலான கூட்டணியை உருவாக்கியுள்ளது. பா.ஜ.க கூட்டணியில், பா.ம.க, த.மா.கா, அ.ம.மு.க, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை கோவையில் ஒரு நீண்ட சாலை பேரணியை நடத்தினார். இந்த பேரணியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ரு மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இதனிடையே, பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில், பா.ம.க இணைந்தது. பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களை ஒரே மேடையில் பங்கேற்கச் செய்யும் விதமாக சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை பா.ஜ.க கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடினார். தி.மு.க-வும் காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அதில் ஒன்று ஊழல், மற்றொன்று குடும்ப கட்சி என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.
மேலும், மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார்.
பா.ஜ.க கூட்டணி கட்சிகள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியுடன், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், ஜி.கே.வாசன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சரத்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் அணிவகுத்து மேடையை அலங்கரித்தனர்.
மேடையில், பிரதமர் மோடி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைகளைப் பிடித்து மகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களுடன் உற்சாகமாக பேசினார்
பிரதமர் மோடியுடன் பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றது கூட்டணி கட்சித் தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.