மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலை பெற்று வருகிறது. அதே நேரத்தில், பா.ஜ.க வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.
மக்களவைத் தேர்தல் 2024 அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதற்கு காரணம், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டு பலத்தைக் காட்டும் என்று கூறினார். மேலும், அ.தி.மு.க தலைவர் மறைந்த ஜெயலலிதா குறித்தும் விமர்சனம் செய்தார்.
மேலும், அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அண்ணாமலையின் அ.தி.மு.க மீதான விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்தனர்.
பா.ஜ.க உடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க தோல்வியைச் சந்திக்க வேண்டியதானது. பா.ஜ.க கூட்டணி என்பது தேவையில்லாத சுமைதான். பா.ஜ.க தனித்து போட்டியிட்டால் காணாமல் போய்விடும் என்று அ.தி.மு.க தலைவர்கள் வெளிப்படையாகவே விமர்சனம் செய்தனர்.
இந்த சூழ்நிலையில்தான், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனது தலைமையில் தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பா.ம.க, த.மா.கா, புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றினைத்து தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல், பா.ஜ.க தலைநகர் சென்னையி 3 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
மக்களவைத் தேர்தல் 2024 வாக்குப் பதிவு முடிந்து இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில், அரசியல் நோக்கர்கள் யாரும் எதிர்பாராத வகையில், வாக்கு எண்ணிக்கையில் தலைநகர் சென்னையில், பா.ஜ.க, அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடம் பெற்று வருகிறது.
சென்னையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலை பெற்று வருகிறது. இருப்பினும், 2வது இடத்தை அ.தி.மு.க பெறும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் முற்பகல் 11 மணி நிலவரப்படி பா.ஜ.க 2வது இடத்தைப் பிடித்துள்ளது
வட சென்னை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி 58,274 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் முன்னிலை வகிக்கிறார். அடுத்து, பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் 17,625 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.
அதே போல, தென் சென்னை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மத்திய சென்னை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிலைமை போகப்போக மாற வாய்ப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“