மறைந்த தலைவர் கருணாநிதிக்குப் பிறகு, எங்களை வீழ்த்தி வெற்றித் தளபதியாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என, பாஜக மூத்தத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான, வெள்ளக்கோவில் சாமிநாதன் சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் சாமிநாதனின் இல்லத் திருமண விழா இன்று (செப்.5) திருப்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருமண விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், "கருணாநிதிக்குப் பிறகு யார் என்று வருகிறபோது, மு.க.ஸ்டாலின், தளபதியாக மட்டுமல்லாமல், எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாகவும் திகழ்கிறார். நாங்கள் இன்னும் கருணாநிதி போல அதிகம் உழைக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "பாஜகவை நாங்கள் வீழ்த்தவில்லை. அவர்களை வீழ்த்தியது மக்கள் தான்" என்று பதிலளித்தார்.
தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில், சிபி.ராதாகிருஷ்ணனும் உள்ளார். இருமுறை மக்களவை உறுப்பினராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், ஸ்டாலினை புகழ்ந்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய போது, "ஸ்டாலினை ராதாகிருஷ்ணன் புகழ்ந்து பேசியது பாஜகவின் கருத்தா என்பது தெரியவில்லை. ப.சிதம்பரம் கைதுக்கு பின்னர் மத்திய அரசு மீது ஸ்டாலினுக்கு சாஃப்ட் கார்னர் வந்துவிட்டது. இப்போது எல்லாம் மத்திய அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சிப்பதில்லை. அடுத்த கைது பயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்" என்றார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு முன்பிலிருந்தே பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த மு.க.ஸ்டாலின், தேர்தல் சமயத்தில் மேலும் வீரியத்தைக் கூட்டினார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது கூட, 'அவர் சிறந்த வழக்கறிஞர். அவரே தனது வழக்கை சிறப்பாக எதிர்கொள்வார்' என்பதே ஸ்டாலினின் முதற்கட்ட கருத்துகளாக இருந்தது.
முதல்வர் பழனிசாமி அந்நிய முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றிருக்கும் நிலையில், அவரது பயணத்தை முன் வைத்தே, கடந்த சில நாட்களாக ஸ்டாலினின் விமர்சனங்கள் உள்ளது.
இந்த நிலையில் தான், பாஜக மூத்தத் தலைவரும், தமிழிசைக்கு பிறகான அடுத்த பாஜக தமிழக தலைவர் ரேஸில் இருப்பவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்டாலினை வெற்றித் தளபதி என்று புகழ்ந்துள்ளார்.
அதேசமயம், சமீபத்தில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலைமை, தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கும் ஏற்படும் என ஹெச்.ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.