Advertisment

பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தலைமறைவா? நிபந்தனையை தளர்த்த கோரிய மனு தள்ளுபடி

பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யாவை தேடும் போலீஸ்; ஜாமின் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த மதுரை நீதிமன்றம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SG Surya

பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா

சிதம்பரம் கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை சிதம்பரம் காவல்துறையினர் தேடி வரும் நிலையில், ஏற்கனவே நீதிமன்றம் விதித்திருந்த நிபந்தனையை தளர்த்த கோரி தொடரப்பட்ட வழக்கில் எஸ்.ஜி.சூர்யாவின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

தமிழக பா.ஜ.க மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் எஸ்.ஜி. சூர்யா, வலதுசாரி இணையதளமான தி கம்யூனின் இயக்குநராக உள்ளார். இந்தநிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து எஸ்.ஜி சூர்யா சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டார். அந்த பதிவில், கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மைப் பணியாளரின் உயிர் பறிபோனது, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார், உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது, எனப் பதிவிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்: வானதி ஸ்ரீனிவாசன் மீது புகார்: திமுக பெண்களை தவறாக சித்தரித்து பேசியதால் சர்ச்சை

இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீஸார், சென்னையில் வைத்து எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து ஜாமின் கோரி எஸ்.ஜி. சூர்யா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுமாறு நிபந்தனை விதித்து எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.ஜி.சூர்யா காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் எஸ்.ஜி.சூர்யாவை தேடி வரும் நிலையில், சமீபத்தில் அவர் டெல்லிக்கு சென்று அங்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் திடீர் சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிகிறது.

இந்தநிலையில், ஜாமீன் நிபந்தனைகளை மீறி அவர் டெல்லி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஜாமீனுக்கு மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திடாத நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், சிதரம்பரம் கோயிலில் தீட்சிதர் பூணூலை போலீசார் அறுத்ததாக கூறி எஸ்.ஜி.சூர்யா சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த பதிவு தொடர்பாக எஸ்.ஜி.சூர்யாவிடம் விசாரணை நடத்த சிதம்பரம் போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக மதுரையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி எஸ்.ஜி சூர்யா தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. எனவே ஜாமின் நிபந்தனையை மீறியதாக எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் கைது செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp Chidambaram Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment