Advertisment

பிரதமர் திட்டமா? முதல்வர் திட்டமா? தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு - அண்ணாமலை இடையே அறிக்கைப் போர்

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டம் மற்றும் மாநில அரசின் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு இடையே எக்ஸ் பக்கத்தில் கடும் அறிக்கைப் போர் நடந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Annamalai TN Fact Check

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு இடையே எக்ஸ் பக்கத்தில் அறிக்கைப் போர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்துக்கு மாநில அரசு முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் என்று பெயர் கொடுத்து புதிய திட்டமாக தமிழக அரசு பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதற்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு பதில் அளித்த நிலையில், எக்ஸ் பக்கத்தில் கடும் அறிக்கைப் போர் நடந்து வருகிறது.

Advertisment

தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அண்ணாமலை, வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுகளை மறுத்து, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என பதிவிட்டது.

இதைத்  தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “திமுக அரசு கூறுவதை உண்மை என்று முன்வைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும், தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பாளர் என்று கூறிக்கொள்பவர் கூற்றைச் செய்தியாக்க, கோபாலபுரம் ஊடகம் களமிறங்கியதிலும் தவறான செய்தி வெளியிட்ட பின்பு அந்த பதிவை நீக்கியதிலும் ஆச்சரியமில்லை.

எனவே, இங்கே சில உண்மையான ஆதாரங்களை முன்வைக்கிறோம்:

1) PMAY-U கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு, வட்டி மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு அதிகபட்ச வட்டி மானியம் ரூ. 2.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது. 

2) 2016-17 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கிடையே, PMAY-G திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியது ரூ. 5541 கோடி ஆகும். இந்த ஆண்டுகளில், இந்தத் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பயன்படுத்திய மொத்த நிதி ரூ. 6921 கோடி.

ஒட்டுமொத்தப் பயன்பாட்டில், PMAY-G திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ஆன மொத்த செலவில், மத்திய அரசு 80% செலவிட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

3) இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால்,  எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டு 2022-23ஐ உதாரணமாக எடுத்துக் கொள்வோம். 

மத்திய அரசின் பங்கு: ரூ. 2004.39 கோடி

மொத்தப் பயன்பாடு (மாநிலப் பங்கு உட்பட): ரூ. 2290.47 கோடி.

தமிழக அரசின் பங்கு ரூ. 286.08 கோடி எனத் தெரிகிறது.  ஆனால், தமிழக அரசின் செலவீட்டுப் பட்டியலில் வேறுவிதமாக இருக்கிறது.

கடந்த 2022-23 நிதியாண்டில், ரூ.555.89 கோடி செலவழித்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. இது உண்மையாகச் செலவிட்ட நிதியை விட ரூ. 269.81 கோடி அதிகமாகும். இதைக் குறித்து தணிக்கை அதிகாரிகள் கேட்கும்போது, தமிழக அரசு பதில் கூறிக்கொள்ளட்டும்.

சுருக்கமாகக் கூறினால், PMAY-G திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழக அரசின் கூற்று முழுக்கப் பொய்யானது.

உண்மைச் சரிபார்ப்புக் குழு என்று அழைத்துக் கொள்ளும் தமிழக அரசு நியமித்துள்ள குழு, தன்னை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்றே அழைக்க வேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு, “பட்ஜெட்: PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல!” என்று பதிவிட்டு அண்ணமலையின் கேள்விக்கு பதிலளித்துள்ளது.

மேலும், அந்த பதிவில் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு பதிவிட்டிந்ததாவது: “பட்ஜெட்: PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல!

வதந்தி: 

மத்திய அரசின்  ‘பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டத்துக்கு மாநில அரசு முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் (MGSMT) என்று பெயர் கொடுத்து புதிய திட்டமாக அறிமுகம் செய்துள்ளது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாம்லை கூறியுள்ளார்.

உண்மை என்ன?

முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் (MGSMT) 

கிராமங்களை தரமான சாலைகள் மூலம் இணைப்பது, கிராமங்களில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது ஆகியவையே இத்திட்டம். மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் வருமானம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக- பொருளாதார காரணிகளைக் கொண்டு MGSMT வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY) 

மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைந்துள்ள சாலைகளுடன் குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராம சாலைகளை தார் சாலைகள் மூலம் இணைப்பதே இத்திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ் சாலைகளை அமைக்க 60% மத்திய அரசும் 40% மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

PMGSY அறிமுகப்படுத்துவதற்கு முன்பே தமிழ்நாடு தொடர்ந்து கிராமப்புற சாலைகளை மேம்படுத்த பெரும் நிதியை முதலீடு செய்துள்ளது. எனவே, ஒன்றிய அரசின் PMGSY திட்டமும் மாநில அரசின் MGSMT திட்டமும் வெவ்வேறானவை” என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்திருந்தது.

தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவின் விளக்கத்துக்கு பதிலடி கொடுத்து அண்ணாமலை மீண்டும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாவது: “பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்திற்கும், தமிழக அரசு கூறியுள்ள கிராம சாலைகள் திட்டத்திற்கும் வித்தியாசம் என்ற பெயரில் ஒரு அரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது தமிழக அரசின் உண்மை (?) கண்டறியும் குழு.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், கடந்த 2000 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர், பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டம். குக்கிராமங்களுக்கும், மலைக்கிராமங்களுக்கும் தார் சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்தில் செலவிட்ட நிதி ரூ.5,837 கோடி. எனினும், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மலைக் கிராமங்களில் சாலை வசதிகள் இல்லாமல் மருத்துவச் சிகிச்சைக்காக டோலி கட்டி தூக்கிக் கொண்டு வரும் அவல நிலைதான் தமிழகத்தில் இன்னும் இருக்கிறது. அப்படியானால், அதற்கு முன்பாக மத்தியில் 2004 – 2014 வரை பத்து ஆண்டுகளாக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக, தமிழகக் கிராமங்களுக்கு ஒன்றுமே செய்ததில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

தி.மு.க அறிவித்துள்ள முதல்வரின் கிராம சாலைகள் திட்டம், கடந்த 2023 ஆம் ஆண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை, தமிழக கிராமங்களில் சாலை வசதிகள் அமைக்கப்படாமல் இருந்ததாகக் கூறுகிறதா தி.மு.க.வின் உண்மை அறியும் குழு? அப்படி அதற்கு முன்பாகவே கிராமங்களில் சாலை வசதிகள் அமைக்கப்பட்டிருந்தால், அவை எந்த நிதியில் மேற்கொள்ளப்பட்டன? மத்திய அரசின் நிதியிலா?அல்லது மாநில அரசின் நிதியிலா? கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நிதி வழங்குவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா?

இவை ஒருபுறம் இருக்க, கடந்த 18.03.2023 அன்று திமுக அரசு வெளியிட்ட அரசாணை எண் 34 ன் படி, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 2022 – 2023 ஆம் ஆண்டிற்கு, ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் செலவு செய்தது, “முட்டை”. இதையும் திமுகவின் உண்மை அறியும் குழு தவறு என்று கூறுமானால், கடந்த ஆண்டு ரூ.2,300 கோடி செலவு செய்ததற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். 

எதற்காக வெள்ளை அறிக்கை கேட்கிறோம் என்றால், முதல்வரின் கிராம சாலைகள் என்ற திட்டத்தைப் பெயரளவில் அறிவித்து, நிதியும் ஒதுக்கீடு செய்துவிட்டு, பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளை, நீங்கள் அறிவித்த திட்டத்தில் கணக்கு காட்டுகிறீர்களோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. எனவே, கடந்த ஆண்டு, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2,300 கோடிக்கான வெள்ளை அறிக்கையை திமுக அரசு கண்டிப்பாக வெளியிட வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு நேரடியாக வழங்கிய நிதி 19,936 கோடி ரூபாய். அதில் செலவிட்டது போக, தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துக்களிடம் மீதமிருக்கும் நிதி அனைத்தையும், தமிழக அரசின் கருவூலத்தில் சேர்க்கச் சொல்லி திமுக அரசு,  உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிதியில்தான், பெயரளவில் கிராமங்களுக்குத் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 7 அன்று, அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் பேசும்போதே இதனைக் குறிப்பிட்டேன். இதனை ஆதாரங்களுடன் மறுக்க திமுகவின் உண்மை அறியும் குழு முன்வருமா?

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை, ஊழல் இல்லாமல், லஞ்சம் வாங்காமல், கமிஷன் அடிக்காமல், பொதுமக்களுக்குக் முழுமையாகக் கொண்டு சேர்த்தாலே, தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் உரிய பலனடைவார்கள். அதை விடுத்து, மாறுவேடம் அணிவது போல, திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி அறிவிப்பது எதற்காக என்பது, தி.மு.க-வின் அறுபதாண்டு கால வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.” என்று பதிவிட்டுள்ளார். 

இப்படி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து,  தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவுக்கும் இடையே எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பெரும் அறிக்கைப் போர் நடந்து வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment