“கடந்த ஆண்டு ரூ.90,000 கோடி கடன்; இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறீர்கள். வாங்குகிற கடனை என்னதான் செய்கிறீர்கள்? இவ்வளவு கடன் வாங்கியும் பொங்கலுக்கு ரூ.1,000 கொடுக்க முடியவில்லை என்ன அரசு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரையில் இருந்து, பா.ஜ.க மாநில மகளிர் அணியின் பேரணி உறுதியாக துவங்கி, சென்னை வந்து ஆளுநரைச் சந்திக்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநில மகளிரணித் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து நீதி கேட்பு பேரணி புறப்பட்டு, சென்னை வந்து, ஆளுநரைச் சந்திக்கிறது. இந்த பேரணி ஏழு இடங்களில் நின்று, சென்னை வரும். மதுரை மாநகர காவல் துறை, பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. காவல் துறை உத்தரவுக்கு பா.ஜ.க கட்டுப்படும். மகளிரணி பேரணியால் எந்த பிரச்னையும் ஏற்படாது. எப்படி இருந்தாலும் மகளிர் அணியினர் ஆளுநரை சந்திப்பார்கள். மதுரையில் இருந்து உறுதியாக எங்கள் பேரணி துவங்கும் என்று அண்ணாமலை கூறினார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக, குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்று கூறிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை அமைதி பூங்கா என்கிறார். தேசிய குற்றவியல் ஆவண அமைப்பு, இந்தியாவில் நடக்கும் குற்றங்களை தொகுத்து அறிக்கை வெளியிடுகிறது. அதன் 2022 அறிக்கையில், தமிழகத்தில் தி.மு.க.,வின் முதல் ஆண்டு ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றம், 8.29 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 8.50 சதவீதம் அதிகரித்துள்ளன. முதல்வர் அமைதி பூங்கா என்று கூறலாம். பெண்களுக்கு எதிராக, குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மாநில குழந்தைகள்உரிமை பாதுகாப்பு ஆணையம், தமிழகத்தில் இரு ஆண்டுகளாக பணிபுரியாமல் செயலிழந்து உள்ளது. இது, முதல்வருக்கு தெரியாதா? கிராமம் முதல் நகரம் வரை, குற்றங்களை பதிவு செய்ய, காவல் துறை மறுக்கிறது. குற்ற செயல்கள் பதிவு செய்யாததை வன்மையாக கண்டிக்கிறோம்.” என்று அண்ணாமலை கூறினார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பஞ்சப்பாட்டு பாடுவதே வழக்கமாக உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்படுகிறது என்று கூறிய அண்ணாமலை, ““கடந்த ஆண்டு ரூ.90,000 கோடி கடன்; இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறீர்கள். வாங்குகிற கடனை என்னதான் செய்கிறீர்கள்? இவ்வளவு கடன் வாங்கியும் பொங்கலுக்கு ரூ.1,000 கொடுக்க முடியவில்லை என்ன அரசு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
மக்களுக்கு செலவு இருக்கும். அரசுக்கு நிதிச்சுமை இருக்கும். அரசு, வாங்கும் கடனை என்ன செய்கிறது. எனவே, பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, பா.ஜ.க விவசாயிகள் பிரிவும், வழக்கறிஞர்கள் பிரிவும் போராட்டத்தில் இறங்கியுள்ளன என்று அண்ணாமலை கூறினார்.
2024-2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் தமிழக அரசு ரூ.45,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) வெளியிட்டுள்ள மாநிலங்களின் சந்தைக் கடன் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள கடன்களில் பெரும்பகுதியானது எஸ்.டி.எல்லில் உள்ளன. ஆர்.பி.ஐ அறிக்கை படி, மார்ச் 31, 2024-ன் இறுதியில் தமிழகத்தின் மொத்த கடன் நிலுவைத் தொகைகள் ₹8,47,022.7 கோடியாகவும், மார்ச் 31, 2025-ல் ₹9,55,690.5 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.