/indian-express-tamil/media/media_files/2025/02/13/Hkz89f964ZL0s01f8D07.jpg)
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார். (Image Source: x/ @annamalai_k
சென்னை திருவான்மியூரில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பா.ஜ.க தலைவராக தொடர முடியாது என்று எனக்கு தெரியும். ஆனால், நான் இங்கு இருந்து செலும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன்” என்று காட்டமாகப் பேசினார்.
மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் திருவான்மியூரில் தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், தாலுகாக்களிலும் இது போன்ற கூட்டம் நடத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் தான் போடும் பட்ஜெட்டிற்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கப் பொதுக் கூட்டம் நடத்துவார். தான் போடும் பட்ஜெட் குறித்து பேசாமல், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுவதற்காக ஸ்டாலின் என்றைக்கு திருவள்ளூர் சென்றாரோ, அப்போதே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது என அனைவருக்கும் தெரிந்துவிட்டது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மதிக்கப்படும் தலைவர் பிரதமர் மோடி. 2014-ல் 3.45 கோடி பேர் வரி செலுத்தினார்கள். 10 ஆண்டுகளில், 7.90 கோடி பேர் வரி செலுத்துகின்றனர். 4.45 கோடி பேர் வரி செலுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். 7.90 கோடி பேரில் 6.80 கோடி பேர் ரூ.12 லட்சத்திற்கும் குறைவான சம்பளம் பெறுபவர்கள். அவர்கள் இந்த ஆண்டு வரி செலுத்த தேவையில்லை. இதன்மூலம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைவார்கள். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான பட்ஜெட்டில் 5 முறை தமிழகத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. மொத்தம் ரூ.8,054 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற்கு ரூ.1,68,585 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2013-14 ஆம் ஆண்டு காங்கிரஸின் கடைசி பட்ஜெட், 15 லட்சம் கோடி பட்ஜெட் தான். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பட்ஜெட் 50 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது வளர்ச்சி இல்லையா? காங்கிரஸ் ஆட்சியில் இந்தியனின் சராசரி வருமானம் ஆண்டுக்கு ரூ.86,000. தற்போது பாஜக ஆட்சியில் ரூ.2,20,000. இது வளர்ச்சி இல்லையா? காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பட்ஜெட்டில் மாநில நிதிப்பகிர்வு ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் கோடி. இந்த ஆண்டு, மாநில நிதிப்பகிர்வு, ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் கோடி. மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு 5 மடங்கு அதிகரித்துள்ளது. முதல்வரே எதற்காக பொய் பேசுகிறீர்கள்? வட்டிக்கடை நடத்துகிறீர்கள் என்று முதல்வர் கேட்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்து 64 ஆயிரம் கோடி நிதிப்பகிர்வு கொடுக்கப்பட்டிருப்பது வட்டியா? ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது வட்டியா? விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்துவது வட்டியா? உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, மாநில அரசுக்கு உதவுவதற்காக, வட்டியில்லாக் கடன் கொடுப்பதை விமர்சிக்கிறார்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள்.” என்று அண்ணாமலை பேசினார்.
திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதைக் குறிப்பிட்டுப் பேசிய அண்ணாமலை, “ஆளுநரும் இருக்கவேண்டும், அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்று முதல்வர் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அப்போதே அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார். இன்னொரு கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வாராம். உங்கள் கட்சியில் தான் துண்டை போட்டு நீங்கள், உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போகிறீர்கள். பா.ஜ.க தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால், அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026-ல் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று அண்ணாமலை காட்டமாகப் பேசினார்.
மத்திய பட்ஜெட் குறித்து த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்திருந்ததற்கு பதிலளிக்கும் விதமாக, விஜயின் பெயர் குறிப்பிடாமல் பேசிய அண்ணாமலை, “புதிதாக கட்சி தொடங்கிய தலைவர் ஒருவர் ஜி.எஸ்.டி-யை குறைப்பது பற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பு இல்லை என கூறுகிறார். ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பது ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்க வேண்டிய முடிவு. ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கும் பட்ஜெட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை யாரிடமாவது கேட்டு அவர் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று விமரிசித்துப் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.