பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பத்திரிகையாளர் சந்திப்பில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.
சாதாரண நிகழ்வுகளைக் கூட, சாதனைகள் போலக் காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் ஆதாரத்தை வெளியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று BSNL நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார்.
அப்படியானால், பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்?
சாதாரண நிகழ்வுகளைக் கூட, சாதனைகள் போலக் காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வறட்டு கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம்.” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“