லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் பணிகளுக்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க சார்பில் 38 தேர்தல் மேலாண்மைக் குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதில், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில், ஆளும் தி.மு.க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, தி.மு.க-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு என தனித்தனியாக குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதே போல, மத்தியில் ஆளும் பா.ஜ.க, மீண்டும் மோடி தலைமையில் 3வது முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் பணிகளுக்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க சார்பில் 38 தேர்தல் மேலாண்மைக் குழுக்களை அமைத்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். இதில், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில், பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் கோரிக்கையையும் அவர்களின் விருப்பங்களையும் பிரதிபலிக்கிற முக்கிய குழுவான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைமை என்ற முக்கிய பொறுப்பு ஹெச். ராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தயாரிக்கும் குழுவில் ஹெச்.ராஜா உள்ளிட்ட 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பா.ஜ.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள மற்ற தேர்தல் மேலாண்மைக் குழுக்கள் அதன் பணிகள் மற்றும் விவரங்களைப் பார்ப்போம்.
பா.ஜ.க தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிக்க ஹெச். ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கே.பி. ராமலிங்கம், கார்வேந்தன், ராம. சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், தேர்தல் அலுவலகக் குழு, கால் செண்டர் குழு, அலுவலக மேலாண்மைக் குழு, புரோடோகால் குழு, ஊடகத் துறைக் குழு, ஊடக தொடர்புக் குழு, சட்ட விவகாரம் மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான குழு, பா.ஜ.க. தேர்தல் பிரச்சார உரை தயாரிக்க தனி குழு, பிரச்சார உரையை அச்சிட தனி குழு, மகளிர் பிரச்சாரக்குழு, இளைஞர் பிரச்சாரக்குழு, பட்டியல் இனப் பிரச்சாரக் குழு, வாக்குச்சாவடிப் பணிக் குழு என மொத்தம் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, தமிழக பா.ஜ.க 38 தேர்தல் மேலாண்மைக் குழுக்களை அமைத்திருப்பதன் மூலம், தேர்தல் பணியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“