தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மு.க. ஸ்டாலின் கடந்த 4 நாள்களாக பதற்றத்தில் இருக்கிறார். தனக்கு பின்னர் கட்சி கனிமொழி கருணாநிதி வசம் சென்றுவிடுமோ என நினைக்கிறார்.
அடுத்து உதயநிதியை துணை முதலமைச்சராக்க நினைக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை ஒரு பூத் ஏஜென்ட் கூட பெரிய பதவிகளில் வரமுடியும்.
ஆனால் இது திமுகவில் சாத்தியமா? குஜராத்தில் சாதாரணமாக பூத் ஏஜென்ட் ஆக பணிபுரிந்து, இன்று நாட்டின் உள்துறை அமைச்சராக உயர்ந்து சேவை செய்துவருகிறார்.
இதனை அவரே கூறியுள்ளார். திமுக டி.ஆர். பாலு அமைச்சராக இருந்த போது தினமும் 9 கிலோ மீட்டர் சாலை போடப்பட்டதாக கூறுகிறார்கள்.
பாஜக ஆட்சியில் தற்போது ஒரு நாளைக்கு 40 கிலோ சாலை போடப்படுகிறது. மேலும், ஒருமுறை அமைச்சராக இருந்த பாலுவை மீண்டும் அமைச்சராக்க அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் விரும்பவில்லை.
அது ஏன்? ஊழலில் அதிகம் திளைத்த அமைச்சர்கள் என்றால் அது டிஆர் பாலுவும், ஆ. ராசாவும்தான். மேலும் நீட் தேர்வு வருவதற்கு முன்பு தனியார் மருத்துவ கல்லூரியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது.
இதனை ஆற்காடு வீராசாமி கருணாநிதியிடம் கூறியுள்ளார். ஆகவே இதைப் பற்றி திமுக பேச எந்த அருகதையும் கிடையாது. தொடர்ந்து, அமித் ஷாவின் பேச்சு குறித்து பதிலளிக்கையில், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
25 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்” என்றார். தொடர்ந்து, திமுக இரண்டு ஆண்டுகளில் பதற்றத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடுதான் மு.க. ஸ்டாலினின் பிதற்றல்.
அமித் ஷா வரும் போது மின்சாரத்தை ரத்து செய்துவிட்டார்கள். இதெல்லாம் பயத்தின் வெளிப்பாடு” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“