தமிழ்நாடு பா.ஜ.கவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. இவர் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் அவதூறு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை வந்த மதுரை போலீசார் எஸ்.ஜி.சூர்யாவை அவரின் இல்லத்தில் வைத்து கைது செய்தனர். நேற்று (ஜுன் 16) இரவு 11.15 மணியளவில் சென்னையில் தி.நகரில் உள்ள எஸ்.ஜி.சூர்யாவின் இல்லத்தில் அவரை கைது செய்து மதுரை அழைத்துச் சென்றனர்.
அண்ணாமலை கண்டனம்
இதை அறிந்த அவரின் ஆதரவாளர்கள் சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையரகம் அலுவலகம் முன்பு பா.ஜ.கவினர் குவிந்தனர். தொடர்ந்து, எஸ்.ஜி சூர்யா கைது செய்யப்பட்டதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் எஸ்.ஜி சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியதால் சூர்யா கைது. ஒருவரின் பேச்சுரிமையை குறைக்க அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது தவறு என்று அண்ணாமலை ட்விட் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“