திருநெல்வேலியில், பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரானையும் மு.க. ஸ்டாலின் விமர்சித்து பேசியபோது, மேடையில் இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்யாதது ஏன் என்று பா.ஜ.க மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 7-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “2023-ஆம் ஆண்டு டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று உங்களுக்கு தெரியும்! அதனால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த பாதிப்புகளிலிருந்து மீள, ஒன்றிய அரசிடம் நாங்கள் நிதி கேட்டோம். இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள்! ஆனால், அவர்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை. நம்முடைய நயினார் நாகேந்திரன் அவர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால், அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார்.
இருந்தாலும், மாநில அரசின் நிதியை வைத்து நிவாரண பணிகளை நாங்கள் செய்தோம். தொடர்ந்து ஒன்றிய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். கொடுக்காத அவர்களை கண்டித்தோம். அப்போதும் வரவில்லை! நாடாளுமன்றத்திலும் பேசினோம். அப்போதும் வரவில்லை! ஏன், நீதிமன்றம் சென்றோம். அதன்பிறகுதான் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். அதுவும் எவ்வளவு? நாம் கேட்டது, 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய்! வேறு வழியில்லாமல் ஒன்றிய அரசு கொடுத்தது, எவ்வளவு கொடுத்தது வெறும் 276 கோடி ரூபாய்! நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காட்டைக் கூட கொடுக்கவில்லை. இப்படிதான் ஒன்றிய அரசு நடந்துகொண்டு இருக்கிறது!
சரி போகட்டும்! இந்த பட்ஜெட்டிலாவது நாங்கள் கேட்ட நிதிகளை ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை! தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள்! மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது, ஒன்றிய பா.ஜ.க. அரசு! அவர்களை பொருத்தவரைக்கும், கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரும் மாநிலங்களுக்கும் மட்டும்தான் அறிவிப்புகளையும் நிதியையும் கொடுப்பார்கள். அதனால்தான் நாங்கள் கேட்கிறோம்.
இந்தியாவின் வரைபடத்தில் மட்டும், தமிழ்நாடு இருந்தால் போதுமா? அரசாங்கம் வெளியிடும் நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? ஒன்றிய அரசின் திட்டங்களில் தமிழ்நாட்டின் பெயர் இருக்க வேண்டாமா? தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களா? இப்படி நாங்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும், பா.ஜ.க.-விடம் இருந்து எந்த பதிலும் வராது.
திருநெல்வேலி அல்வா என்றால் உலக அளவில் புகழ்பெற்றது. ஆனால், இப்போது, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வாதான் அதைவிட புகழ்பெற்றதாக இருக்கிறது! நம்முடைய திராவிட மாடல் அரசை பொருத்தவரைக்கும் – ஒன்றிய அரசை பொருட்படுத்தாமல், நமக்கு நாமே-என்று தமிழ்நாட்டை மேம்படுத்தி வருகிறோம். அதனால்தான், ஒன்றிய அரசு வெளியிடும் எல்லா புள்ளிவிவரங்களிலும் முன்னணியில் இருக்கிறோம்! அதற்கு காரணம், வாக்களித்த மக்களான உங்களுக்கு, நாங்கள் உண்மையாக இருக்கிறோம்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனை மேடையில் வைத்துக்கொண்டே பேசினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த பேச்சு ஊடகங்களில் கவனம் பெற்றது.
இந்நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலையை மு.க. ஸ்டாலின் விமர்சித்து பேசியபோது, மேடையில் இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கண்டித்து வெளிநடப்பு செய்யாதது ஏன் என்று பா.ஜ.க மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலி கூட்டத்தில் சவால் விடுகிறார். யாரை சவால் விடுகிறார் என்றால், உலகமே வியந்து பாராட்டும் பாரதப் பிரதமர் மோடியைப் பற்றி தரக்குறைவாகப் பேசுகிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டை குறை சொல்லியும் மத்திய அரசாங்கத்தையும் குறை சொல்லி பேசுகிறார். இதை யாரை வைத்துகொண்டு பேசினார் என்பதை யோசிக்க வேண்டும். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையோ, கேசவ விநாயகமோ பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால், எங்களை மாதிரி தொண்டர்கள் நாங்கள் எல்லாம் பெருந்தன்மையாக இருக்க முடியாது. எல்லாத்துக்கு ஒரு நியாயம், தொண்டனுக்கு ஒரு நியாயம், தலைவனுக்கு ஒரு நியாயம். மு.க. ஸ்டாலின், நயினார் நாகேந்திரனை வைத்துக்கொண்டு பேசுகிறார். நயினார் நாகேந்திரன் அந்த கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். அரசியல் நாகரிகம் கருதி வெளிநடப்பு செய்யவில்லை. குறைந்தபட்சம் அந்த கூட்டம் முடிந்து, ட்விட்டரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு பத்திரிகை அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். இதுவரைக்கும் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் குறைசொல்லி பேசியதற்கு ஒரு டிவிட்டர், ஃபேஸ்புக் அறிக்கை கொடுக்கவில்லை ஏன்?” என்று கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பினார். மேலும், இப்படி கேள்வி எழுப்பியதற்காக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என் மீது கோபித்துக்கொண்டாலும் அதைப் பற்றி கவலை இல்லை என்று நயினார் நாகேந்திரனை நோக்கி கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.