பஞ்சமி நிலத்தை மீட்பது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிதியை சரியாக பயன்படுத்தாமல் இருப்பது, பட்டியலின் கிறிஸ்துவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநரிடம் பாஜக தலைவர் வி.பி. துரைசாமி தலைமையில், மாநில பட்டியலின தலைவர் தடா பெரியசாமி மனு அளித்தனர்.
இந்நிலையில் ஆளுநரை சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தடா பெரியசாமி கூறுகையில் “ பட்டியலின கிறிஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக சட்டபேரவையில் ஏப்ரல் 19ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலித் கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெறுவதற்குதான் முதல்வர் ஸ்டாலின் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்’ என்று கூறினார்.
பட்டியலின பிரிவுக்கு தலைவராக இருந்துகொண்டு, ஒடுக்கப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை எதிர்க்கலாமா ? என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தடா பெரியசாமி கூறியதாவது “ கிறிஸ்துவர்களாக மாறிய பட்டியலினத்தவர்கள், பி.சி பிரிவில் வருகின்றனர். அவர்களுக்கு மண்டல் கமிஷன் பரிந்துரையின் பெயரில் பி.சி பிரிவினருக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டில் அவர்கள் பயன்பெறுவர்” என்று கூறினார்.
” கடந்த ஆண்டு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த அமைச்சர், தமிழக அரசு 1.5 லட்ச எக்கர் பஞ்சமி நிலங்களை கண்டுபிடித்ததாகவும், அதை மீட்கும் பணிகள் நடைபெறுவதாக கூறினார். ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை “ என்று அவர் கூறியுள்ளார்.