மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹார் வாய்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பா.ஜ.க அலுவலகத்தில் அவருடைய படத்திற்கு மரியாதை செலுத்திய, தமிழ்நாடு பா.ஜ.க-வின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அ.தி.மு.க-வுக்குள் என்ன பிரச்னை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள் என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ.க மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, வாய்பாய் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி கூறியதாவது: “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்ம நிர்பர் பாரதத்திற்கு வலிமையான அடித்தளமிட்டவர் வாஜ்பா. அவர் காட்டிய பாதையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று இந்தியா முன்னேறி வருகிறது. வாஜ்பாய் உழலற்ற ஆட்சியை வழங்கியவர். அவர் எதிரிகளே இல்லாதவர் வாஜ்பாய். இலவச கல்வி உள்ளிட்ட மக்களுக்கான பல திட்டங்களைத் தொடங்கியவர்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சுதாகர் ரெட்டி, “தமிழகத்தில் நடக்கும் ஆட்சி குடும்பத்திற்காக குடும்பத்தால் நடத்தப்படும் ஆட்சியாக இருக்கிறது. தமிழகத்தில் குண்டாயிசம் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி கடந்த முறை ஊழலால், தரமற்ற பொங்கல் பொருட்களை மக்களுக்கு வழங்கியது. ஆனால், இந்த முறை கரும்புகூட இல்லாத பொங்கல் பரிசை வழங்கியுள்ளது.” என்று தமிழகத்தில் ஆளும் தி.மு.க ஆட்சியை விமர்சித்தார்.
மேலும், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சசிகலா புஷ்பா வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற நிலைதான் இங்கு உள்ளது. உரிய நேரத்தில், உரிய முறையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று எங்கள் மாநிலத் தலைவர் சொல்லிவிட்டார். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை அவர்களுக்குள் என்ன பிரச்னை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள்” என்று சுதாகர் ரெட்டி கூறினார்.
பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா டிசம்பர் 27-ம் தேதி தமிழகம் வருவது கட்சியை வலுப்படுத்துவதற்காக மட்டுமே. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை பூத் கமிட்டி அளவில் பணிகளை மேற்கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் என்று சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசிய பா.ஜ.க மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, “அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் உள்ளன, வழக்குகள் உள்ளன, அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அவர் பதவி விலகவில்லை. முதலமைச்சரும் அவரை பதவியில் இருந்து விலக்கவில்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“