தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட பா.ஜ.க ஆதரவாளர் கிஷோர் கே சாமி சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பா.ஜ.க ஆதரவாளரும், சமூக ஊடகவியலாளருமான கிஷோர் கே சாமி, மழை பாதிப்பு இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, அவதூறு கருத்து பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், விசாரணைக்கு ஆஜராகும்படி நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கிஷோர் கே சாமிக்கு காவல்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் கிஷோர் கே சாமி ஆஜராகவில்லை. இதனையடுத்து அவரை கைது செய்ய காவல்துறை தேடி வந்தது.
இதையும் படியுங்கள்: ராஜீவ் கொலை வழக்கு; 6 பேரின் விடுதலையை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் முடிவு
இதற்கிடையில் முன் ஜாமீன் கோரி கிஷோர் கே சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில், அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்த போலீசார், 4-வது வழக்கில் கிஷோர் கே.சாமியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தற்போது அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் கிஷோர் கே சாமி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கிஷோர் கே.சாமி கைதுக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கிஷோர் கே.சாமி கைதை தமிழ்நாடு பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது. தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த தி.மு.க அரசு, தமிழக பா.ஜ.க பெண் தலைவர்களை இழிவாக பேசிய தி.மு.க பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? கிஷோர் கே.சாமி தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழ்நாடு பா.ஜ.க செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன், எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil