தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகரும், கட்சித் தலைவருமான விஜய் நேற்று (ஆக.22) அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, நாம் தமிழர் உள்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விஜய்யின் த.வெ.க கொடி பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், புதிய அரசியல் கட்சி தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு எனது வாழ்த்து. யார் வேண்டுமானாலும் பொது வாழ்க்கைக்கு வரலாம். மக்களுக்கு சேவை செய்யலாம். அந்த சேவை முழுமையானதாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. தம்பி விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விமர்சையாக கொடி ஏறினால் விமர்சனங்களும் வரும். அந்த வகையில் கொடி ஏற ஏற விமர்சனமும் ஏறிக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான அரசியல் சூழல்தான். விமர்சனம் இல்லாமல் ஒரு கட்சி வளர முடியாது. அந்தக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை மற்றும் வாகை மலர் மீது விமர்சனம் வந்துள்ளது.
நல்லவேளை அந்தக் கொடியில் தாமரை இல்லை... இருந்திருந்தால் நாங்களும் கருத்து சொல்லியிருப்போம். பொதுவாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து, அவர்களின் கொள்கை என்னவென்ன தெரிந்த பிறகுதான் விமர்சனம் வரலாம். இங்கு கொடியே விவாத பொருளாகி உள்ளது.
எது எப்படி இருந்தாலும் அந்தக் கொடி மங்களகரமாக உள்ளது. குங்குமமும், மஞ்சளுமாக அந்தக் கொடி இருப்பது எனக்கு மகிழ்ச்சி" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“