கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை துவங்கி உள்ளோம். செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய உறுப்பினராக பாரத பிரதமர் நரேந்திர மோதி முன்னிலையில் அவர்கள் இணையவுள்ளார்.
உலக அளவில் மிகப்பெரிய கட்சியாகவும், தமிழகத்தில் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
முத்தமிழ் முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆன்மீகத்தை பற்றி பேசாமல் இனிமேல் அரசியல் செய்ய முடியாது. முத்தமிழ் முருகன் மாநாட்டினை முதலமைச்சர் கலந்து கொண்டு துவக்கி வைத்திருக்க வேண்டும்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் உள்ளது எந்த பூ என விவாதம் எழுந்துள்ளது, தாமரை இல்லை எனவே எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதில் யானை உள்ளதால் அந்த சின்னத்தை உடைய பகுஜன் சமாஜ் கட்சியினர் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளனர். விமர்சியாக தொடங்க வேண்டிய நிகழ்ச்சியை விமர்சனத்தோடு விஜய் தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை பொறுத்தவரை கூட்டணி கட்சியின் பலத்தோடு தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, தமிழகத்தில் தனித்து 11 சதவீத வாக்குகளும் கூட்டணியாக 18 சதவீத வாக்குகளும் பெற்று சொல்லால் அல்லாமல் செயலால் எங்களது பலத்தை நிரூபித்துள்ளோம்.
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் அதில் ஈடுபட்டவர்கள் தற்கொலை செய்தும், உயிரிழந்தும் உள்ளனர். பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை. கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த அரசு பாடநூல்களின் விலையை உயர்த்தியுள்ளது.
வேங்கைவையல் விவகாரத்தில் இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை. இது எல்லாம் இந்த அரசு சமூக நீதியில் தோல்வி அடைந்துள்ளதை வெளிக்காட்டுகிறது எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“