”ஆர்.கே.நகரில் நடைபெற்றது உண்மையான தேர்தல் இல்லை எனும்போது, முடிவுகள் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும்?”, என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாஜக நோட்டாவைவிட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “இந்த தேர்தலில் பாஜக பின்தங்கியுள்ளது என சொல்ல முடியாது. அதிமுக, திமுக எல்லோரும் தான் பின்னடைந்திருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழகமே தன்மானத்தில் பின்னடைந்திருக்கிறது.”, என கூறினார்.
மேலும், ”வாக்குக்கு பணம் கொட்யுக்கப்படுகிறது என முதல் நாளிலிருந்தே சொல்லிக்கொண்டிருந்தோம். தினகரன் இதுவரை என்ன செய்திருக்கிறார்? தமிழகத்திற்கென தியாகம் செய்திருக்கிறாரா?”, என தெரிவித்தார்.
நடைபெற்றது உண்மையான தேர்தலே இல்லை எனும்போது தேர்தல் முடிவுகளை எப்படி உண்மை என நினைக்க முடியும் என தமிழிசை கேள்வி எழுப்பினார்.
ஆர்.கே.நகரில் வாக்களர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடவில்லை எனவும், டிடிவி தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டு டோக்கன் வழங்கியிருப்பதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார்.