Advertisment

2024 தேர்தல்; பா.ஜ.க பட்டியலில் இந்த தொகுதிகள்… அ.தி.மு.க சம்மதிக்குமா?

அ.தி.மு.க-வில் சில தலைவர்கள், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க தோல்வியை சந்தித்ததாக கூறி வருகின்றனர். இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கேட்கும் இந்த 10 தொகுதிகளைத் தர அ.தி.மு.க சம்மதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BJP, AIADMK, Tamilnadu, 2024 elections, BJP plan,பாஜக திட்டம், பாஜக, அதிமுக, 2024 தேர்தல், Tamilnadu, ops, eps, annamalai

அ.தி.மு.க.வில் சி.டி.ஆர் நிர்மல் குமார்? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் இருவரும் சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் சூழ்நிலையில், கூட்டணி கட்சியான பா.ஜ.க 2024 தேர்தலை குறிவைத்து பணிகளைத் தொடங்கியுள்ளது. அதிலும், தமிழகத்தில் பா.ஜ.க இப்போதே சில தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் அதற்கு அ.தி.மு.க சம்மதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisment

அ.தி.மு.க 2011 முதல் 2011 வரை 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில், பல நிகழ்வுகள் நடந்தாலும், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஒன்றாக இணைந்து 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தனர். 2021 தேர்தலில் ஆட்சியை இழந்தாலும், 65 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. ஆனால், 2021 தேர்தலுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகளுக்கு இடையேயான உரசல் வலுக்கத் தொடங்கியது. ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் அது பெரும் மோதலாக வெடித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பின்படி, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக உள்ளார். உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

4 அண்டுகள் மத்தியில் உள்ள பா.ஜ.க தலைமையின் ஆதரவுடன் ஆட்சியை நிறைவு செய்த அ.தி.மு.க-வில், இப்போது பா.ஜ.க தலைமையின் (மோடி, அமித்ஷா) ஆதரவு யாருக்கு என்பது இன்னும் வெளிப்படையாகத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன் இவர்கள் இல்லாமல் அ.தி.மு.க-வை தனது தலைமையின் கீழ் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருமே பா.ஜ.க-வின் தலைமையை சமமாக அணுகி வருகின்றனர்.

அ.தி.மு.க-வில் நிலவும் இப்படி ஒரு சூழ்நிலையில்தான், 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் கால் நூற்றாண்டுக்கு மேல் இரு துருவங்களாக விளங்கி வந்த பெரும் அரசியல் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா மறைவால், அவர்களைப் போன்ற மக்கள் கவர்ச்சி மிக்க ஆளுமைகள் இல்லாதது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பா.ஜ.க தமிழ்நாடு அரசியலில் வலுவாகக் காலூண்ற முயற்சி செய்கிறது.

இரு பெரும் தலைவர்கள் இல்லை என்றாலும், எதிரும் புதிருமாக இருக்கும் தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் அடித்தளத்தில் வலுவான கட்சி கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் தேர்தல் அரசியலில் இன்னும் இரண்டு கட்சிகளும் முன்னணியில் இருக்கின்றன.

இருப்பினும், அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது.

பா.ஜ.க தலைவர்கள் பலரும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறி வருகின்றனர். அதற்கான வாய்ப்பு கிடைத்தால் நிறைவேற்றி விடலாம் என்ற முனைப்பில் உள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளைக் கூட தேர்வு செய்து குறிவைத்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, அண்மையில் சென்னையில் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்திருந்தார். அப்போது, ​​தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் விட்டுச் சென்ற “பெரிய வெற்றிடத்தை” கருத்தில் கொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பா.ஜ.க நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் செய்யப்படுவது போல் அடித் தளத்தில், பா.ஜ.க-வை வலுப்படுத்த வேண்டும் என அமித்ஷார் நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். “தி.மு.க அரசியல் செய்து வருவதாகவும், அ.தி.மு.க கணிசமாக பலவீனமடைந்துள்ளதாகவும் அமித்ஷா கூறினார். பா.ஜ.க. களமிறங்குவதற்கும், வெற்றி பெறுவதற்கும் இதுவே சரியான தருணம்' என, பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர்.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் தேசிய மற்றும் மாநிலத் தலைமை அதற்கான வியூகத்தை வகுக்கும் என்று கூறுகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க சென்னை தெற்கு, கோவை, ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட 10 தொகுதிகள் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளாக அக்கட்சி கண்டறிந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு அடிக்கடி வருவதும், நிர்வாகிகள் நியமனம் செய்வதும் தொடங்கியுள்ளது.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாதயாத்திரை மேற்கொள்வார் என்றும், அவருடன் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமித்ஷாவைப் பொறுத்தவரை, தமிழகத்தை வெல்வது என்பது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வெற்றி பெற்றதற்கு சமம் என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள்.

ஓரிரு மாதங்களுக்கு முன்னர், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றிருந்தபோது, ​​“மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது” என்று அமித்ஷாவை சந்தித்து புகார் அளித்தபோது, அ.தி.மு.க-வின் உள்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க தேசியத் தலைமை தலையிடாது” என்று அமித்ஷா பதில் கூறியதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க ஒரு பக்கம் அ.தி.மு.க-வின் கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு, மறுபக்கம் வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க திட்டம் தீட்டுகிறது. சென்னை தெற்கு, கோவை, ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட 10 தொகுதிகளை தேர்வு செய்தும் விட்டது. ஆனால், அ.தி.மு.க கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அவற்றில் ஒரு இடத்தில்கூட பா.ஜ.க வெற்றி பெறவில்லை.

ஏற்கெனவே, அ.தி.மு.க-வில் சில தலைவர்கள், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க தோல்வியை சந்தித்ததாக கூறி வருகின்றனர். இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கேட்கும் இந்த 10 தொகுதிகளைத் தர அ.தி.மு.க சம்மதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அ.தி.மு.க-வில் இதே நிலை தொடர்ந்தால், அதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment