சென்னை மழை வெள்ளம் குறித்து கள நிலவரத்தை விவரித்த, பத்திரிகையாளர் ஷபீர் அஹமது-க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதிக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இருப்பினும், ஆங்காங்கே மக்கள் தங்கள் பகுதியில் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை, அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் சிரமப்படுவதாகத் தெரிவித்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், சென்னை மழை வெள்ளம் குறித்து கள நிலவரத்தை விவரித்த, பத்திரிகையாளர் ஷபீர் அஹமதுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதிக்கு பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இது குறித்து நாரயணன் திருப்பதி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “எதைக் கொண்டு அடிப்பது (தரக்குறைவான வார்த்தை)... உன்னையெல்லாம் நிம்மதியா வாழவே விடக் கூடாது, (தரக்குறைவான வார்த்தை)' ……. என்று சென்னை வெள்ள பாதிப்பு குறித்து அரசை விமர்சித்த ஊடகவியலாளர் ஷபீரை விமர்சித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி உள்ளிட்ட தி.மு.க ஐ.டி விங் பிரிவைச் சார்ந்தவர்கள்.
அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதா... அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் வாழவே விடக் கூடாது என்று சொல்வதா... மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை ஒருமையில் விமர்சித்துள்ளது, பெண் இனத்தையே கேவலப்படுத்தும், அவமானப்படுத்தும் செயல். இந்த 'ட்விட்டர் ஸ்பேஸ்' தளத்தில் பேசிய அனைவரின்மீதும் தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்குமான முதல்வர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பத்திரிகை சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை சற்றும் மதிப்பாரேயானால், இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை தி.மு.க-விலிருந்து நீக்க வேண்டும்.
சட்டப்படி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், ஷபீர் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
இதே போல, வி.சி.க பொதுச் செயலாளர் வன்னி அரசு, “தி.மு.க-வின் அடையாளத்துக்குள் பதுங்கிக்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும்
சமூக விரோதிகளை கொலை முயற்சி (307) வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
வன்னி அரசு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “தி.மு.க-வின் அடையாளத்துக்குள் பதுங்கிக்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும்
சமூக விரோதிகளை கொலை முயற்சி (307) வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். தி.மு.க தலைமை இப்படிப்பட்ட உதிரித்தனத்தை விரும்பாது என்றே நம்புகிறோம். சனநாயகத்தின் நான்கு தூண்களில் மிக முக்கியமானது ஊடகங்களாகும். அப்படிப்பட்ட ஊடகத்தினரை பாதுகாப்பது ஒவ்வொரு சனநாயகவாதிகளின் கடமையாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“