நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நமோ ஆப் மூலம் தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் நேற்று(20.12.18) உரையாற்றினார்.
மோடி அட்வைஸ் :
நேற்றைய தினம், புதுச்சேரி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், தென்சென்னையைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் பேசினார். இந்த உரையாடலில் பாஜக ஓட்டுசாவடி முகவர்களும் கலந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பூத் கமிட்டி அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலமே தேர்தலில் வெற்றியைப் பெற முடியும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கிடைத்த பயன்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இதற்காக மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது தகவல், மேம்பாடு, வளர்ச்சி ஆகிய மூன்றையும் மனதில் வைத்துச் செயல்படுங்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நான் வழக்கமாக வருவது உண்டு. தமிழகம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஸ்மார்ட் சிட்டிக்காக தென்சென்னை தேர்வு செய்யப்பட்டு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வர இருக்கிறது. கல்வி என்பது வெறுமனே விஷயங்களை திணிப்பது மட்டும் அல்ல. திறமைகளையும் வளர்க்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்துக்கும் அதிகமான திறன் வளர்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ராணுவம், தலைமை கணக்காயர், உச்சநீதிமன்றம் என அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் காங்கிரஸ் அவமதிக்கின்றனர்.தேர்தலில் தோற்றால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என அழுகின்ற காங்கிரஸ், வெற்றி பெற்றால் வாக்குப்பதிவு எந்திர நடைமுறையை ஏற்றுக்கொள்வதில்லை
.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள கட்சி நிர்வாகிகள் இன்னும் அதிகமான ஆர்வத்துடன் உழைக்க வேண்டும். திரிபுரா போன்ற மாநிலத்தில் பா.ஜனதாவின் வெற்றிக்கு காரணம், கட்சி நிர்வாகிகளின் கடின உழைப்பு தான். அதைப்போல தமிழக நிர்வாகிகளும் இன்னும் அதிகமான ஆர்வத்துடன் கடினமாக உழைத்தால் இங்கும் நாம் வெற்றி பெறமுடியும்” என்று கூறினார்.
இந்த உரையாடலில் ‘பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும்’ என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும். அதுபற்றி இப்போது பேச வேண்டாம்’ என்று மோடி பதிலளித்தார்.
புதுச்சேரியில் முத்ரா கடன் திட்டத்தில் நிதி பெற்ற விமலாதேவி என்ற பெண்மணி, தான் தலையணை செய்து லாபகரமாக விற்பனை செய்து வருவதாக கூறினார்.
மேலும் வாசிக்க... வாக்குச்சாவடி வரை பாஜக சிறப்பாக செயல்பட வேண்டும் : மோடி உரை
இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர்,நமோ ஆப் மூலம் தலையணையை விற்க ஆலோசனை வழங்கினார். நிர்மல் குமார் ஜெயின் என்பவர் வரியை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் போல் நடுத்தர வர்க்கத்தினர், கட்சி தொண்டர்கள் இதிலிருந்து விடுப்பட்டு நிம்மதியாக இருக்கவும் நடவடிக்கை எடுங்கள் என்று குறிப்பிட்டார். அதற்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை.