பொதுத்தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.
இதில் தி.மு.க கூட்டணியில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் வி.சி.க போட்டியிடுகிறது.
சிதம்பரத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
கடந்த சில நாட்களாகவே சிதம்பரத்தில் முகாமிட்டிருக்கும் அவர், அங்குள்ள பல்வேறு சங்கத்தினரை சந்தித்து தனக்கு ஆதரவு கோரி வருகிறார்.
இந்நிலையில் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற திருமாவளவனை அங்குள்ள தீட்சிதர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். கோயில் மரபுப்படி சட்டையைக் கழட்டி விட்டு, நடராஜரை அவர் தரிசனம் செய்தார்.
பின்னர் கோயில் நிர்வாக அலுவலகத்தில் அமர்ந்து தீட்சிதர்களுடன் உரையாடினார். நெற்றி நிறைய விபூதியுடன் இந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் "சனாதனத்தை ஒழிப்போம் - அன்று; இந்துக்கள் ஓட்டு வேண்டும் - இன்று; யார் அவர்?" என்று ட்வீட் செய்து கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அந்த கார்ட்டூனில், “அன்று: சனாதனத்தை ஒழிக்க நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களையும் இடித்து அகற்ற வேண்டும்
இன்று: ஐயா இந்துக்களே! உங்க ஓட்ட எனக்கு போட்டு என்ன காப்பாத்துங்க. ஐயா காப்பாத்துங்க” என திருமாவளவன் காவி உடையில் ருத்திராட்சை மற்றும் விபூதி பட்டையுடன் இருக்கும் படி வரையப்பட்டுள்ளது.