மோடி அமைச்சரவையில் அதிமுக எம்.பி. வைத்திலிங்கத்திற்கு இடமா? பாஜக.வின் 5 அதிருப்திகள் இதோ...

குட்கா வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்தால், சட்டசபை தேர்தலின் போது அவர்களை விலக்க நேரிடும்

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுகிறதா? என்கிற கேள்வி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில், அதிமுக மீது பாஜக கடும் அதிருப்தியில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

நடந்து முடிந்த தமிழக லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில், பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணியில், பாமக. தேமுதிக. புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து களம் கண்டன. லோக்சபா தேர்தலில், தேனி தொகுதியில் மட்டும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். மற்ற எல்லா இடங்களிலும், இந்த கூட்டணிக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. 22 தொகுதிகளில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது.

தேசிய அளவில் மொத்தமுள்ள 542 ( வேலூரில் தேர்தல் நடைபெறவில்லை) தொகுதிகளில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. மோடி, நாட்டின் பிரதமராக இன்று (30ம் தேதி) இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இவருடன் மத்திய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், கட்சியின் மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் ஆகலாம் என்கிற பேச்சு இருக்கிறது. இதனிடையே, அதிமுகவை மத்திய அமைச்சரவையில் சேர்க்க பாரதிய ஜனதா கட்சியே விரும்பவில்லை என தகவல்கள் வருகின்றன.

வைத்திலிங்கம், மத்திய அமைச்சர், vaithilingam, union minister

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம் மத்திய அமைச்சர் ஆகிறாரா? பாஜக.வின் 5 அதிருப்திகள் பட்டியல்

1. லோக்சபா மற்றும் சட்டசைப இடைத்தேர்தலுக்கு முன்பே, மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினரை சந்தித்துப் பேசிய பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா. பா.ஜ. – அதிமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், அதிமுக அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி என்ற பெயரிலேயே தேர்தலை சந்தித்தது. இதனால், அமித் ஷா கடும் அதிருப்தியில் உள்ளார்.
2. அதிமுக, லோக்சபா தேர்தலை விட, சட்டசபை இடைத்தேர்தலிலேயே அதிக கவனம் செலுத்தியதாக பா.ஜ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அதிமுகவை நம்பித்தான் பாரதிய ஜனதா கட்சி, கோவை தொகுதியில் போட்டியிட்டது. அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு பகுதியிலேயே அக்கூட்டணியின் வேட்டாளர் தோல்வியடைந்ததை, பா.ஜ. கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை.
4. 2021ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், இதே கூட்டணியை பா.ஜ. விரும்பவில்லை. இதற்காகவே, ரஜினிக்கு பாரதிய ஜனதா வலைவிரிக்கிறது. ரஜினியின் கோரிக்கையான நதிநீர் இணைப்பு திட்டத்தின் ஒரு அம்சமாக, தற்போது கோதாவரி – காவிரி இணைப்புத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில், ரஜினி – பா.ஜ. தலைமையில் புதிய அணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
5. அதிமுக பிரமுகர்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. குட்கா வழக்கு, வருமானவரி சோதனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்தால், சட்டசபை தேர்தலின் போது அவர்களை விலக்க நேரிடும். இவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடமளித்தால், பாரதிய ஜனதா கட்சிக்கு பாதகமான விளைவுகளே ஏற்படுத்தும் என்று அக்கட்சி நம்புகிறது. இத்தகைய காரணங்களை பா.ஜ. பட்டியலிட்டுள்ளது.

விரைவில் ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில் அன்புமணிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டாலும், மீதி 2 இடங்கள் அதிமுகவிற்கு தான். இதற்கு கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி உள்ளிட்ட ஓரிருவர் பெற தீவிரம் காட்டுகின்றனர். இதனிடையே, தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற நிலையிலும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைப்பது என்பது கானல்நீராக தான் இருக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறும்.  கடைசி நிலவரம் இன்று தெரியும். அமைச்சரவை தொடர்பாக கூட்டணித் தலைவர்களுடன் பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதிமுக தலைவர்களுடன் இதுவரை ஆலோசனை நடத்தியதாக தகவல் இல்லை.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக மேலிடம் முடிவெடுத்திருக்கிறது. அதிமுக தரப்பில் ராஜ்யசபை எம்.பி. வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி பெற முயற்சி நடப்பதாக தெரிகிறது.

 

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close