தமிழக பாஜக வெற்றிவேல் யாத்திரைக்காக வெளியிட்டுள்ள “வாராரு வாராரு முருகவேல் கொண்டு” என்ற பிரசாரப் பாடல் வீடியோ, பாஜக எம்.ஜி.ஆரை சொந்தமாக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதனால், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, மத்தியில் ஆளும் பாஜக ஆகிய கட்சிகள் இப்போதே தங்களுடைய தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், திருத்தனியில் இருந்து திருச்செந்தூர் வரை வெற்றிவேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த வெற்றிவேல் யாத்திரை நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், வெற்றிவேல் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று எல்.முருகன் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெற்றிவேல் யாத்திரைக்கான அடையாள சின்னத்தை வெளியிட்ட பாஜக தலைவர் எல்.முருகன், வெற்றிவேல் யாத்திரை வருகிற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். அப்போது, வெற்றிவேல் யாத்திரைக்காக, “வாராரு வாராரு முருகவேல் கொண்டு” என்ற பிரசாரப் பாடலும் வெளியிடப்பட்டது.
தமிழக பாஜக வெற்றிவேல் யாத்திரைக்காக வெளியிட்டுள்ள “வாராரு வாராரு முருகவேல் கொண்டு” பாடலில் எம்.ஜி.ஆர் பற்றி இடம்பெற்றுள்ள வரிகள் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன எம்.ஜி.ஆர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், அதிமுகவை தொற்றுவித்தவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடும் வகையில், “அந்த பொன்மனச்செம்மலின் அம்சமாய் நாங்கள் மோடியைக் கண்டோமடா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிகல் பாடப்படும்போது, அதற்கான படக் காட்சியில், எம்ஜிஆர் அப்படியே மோடியாக மாறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை பிரசாரப் பாடலில், பாஜக எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடும் வகையில் குறிப்பிட்டுள்ளதை அறிந்து அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக இடையே கூட்டணி என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். இருப்பினும், அவ்வப்போது, கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் வகையில், இரு கட்சிகளின் தரப்பிலும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை பாடலில், எம்.ஜி.ஆர் பற்றி குறிப்பிட்டதற்கு, அதிமுகவினர் சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன், “எம்.ஜி.ஆர்-ன் புகைப்படத்தை அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் பயன்படுத்த கூடாது என தெரிவித்துள்ளார். அவ்வாறு பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை எனக் கூறி, அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.
பாஜக வெற்றிவேல் யாத்திரை பிரசாரப் பாடலில் எம்.ஜி.ஆர் பற்றி குறிப்பிட்டதை அதிமுகவினர் மட்டுமல்லாமல் திமுக மற்றும் பொதுவான அரசியல் ஆர்வமுள்ள நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.