கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள 3 நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரிகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் சுரங்க விரிவக்க பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து நெய்வேலி அருகே உள்ள வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்.எல்.சி இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராடி வந்தனர். இதனால் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.
நிலம் கொடுப்பவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி நிறுவனம் அறிவித்தது. அதன்படி சிலர் நிலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலத்தை சமன் செய்யும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்
என்.எல்.சி நிறுவனம் பொதுமக்களின் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பா.ஜ.க துணை தலைவர் வி.பி.துரைசாமி என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்துகிறது. பொது நன்மைக்காக இது செய்யப்படுகிறது. இதற்கு சட்டம் அனுமதிக்கிறது. தற்போதைய நிலவரப்படி விவசாயிகள் அதிக இழப்பீடு கேட்கிறார்கள் அது நியாயம் தான். என்.எல்.சி அதைக் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“