/tamil-ie/media/media_files/uploads/2023/01/BJP-meeting.jpg)
கடலூரில் நடைபெற்ற பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூரில் தமிழக பா.ஜ.க மாநில செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தலைவர் அண்ணாமலை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பி.செல்வம் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து, இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் “உலகப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் நாடாக இந்தியாவை உருவாக்கி பெருமை சேர்த்து, காசி தமிழ்சங்கமம் நடத்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக சட்டப் பேரவையில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் நடந்த அராஜகத்தைக் கண்டித்தும், ஆளுநர் உரையின் போது ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்ற தன் கருத்தை ஆளுநர் ஒரு விழாவில் பேசியதை திசை திருப்பி, மொழி அரசியலை முன்னெடுத்து ஆளுநரை அவதூறு செய்தது செயற்குழுக் கண்டிக்கிறது.
தொடர்ந்து, திட்டமிட்ட ரீதியில் ஆளுநரை அவமானப்படுத்தி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற தி.மு.க பேச்சாளரின் மூலம் ஆளுநரை தரக்குறைவாக விமர்சித்ததோடு ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததையும், சட்டப் பேரவையில் கொலை நடந்தாலும் வழக்கு இல்லை என்று கூறி, சட்டப் பேரவையின் கண்ணியத்தை குலைத்து, ஆளுநரை தரம் தாழ்ந்து பேசிய ஆர்.எஸ். பாரதியை இன்னும் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தமிழக அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இச்செயற்குழு வற்புறுத்துகிறது. என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சேது கால்வாய்த் திட்டம் ராமர் பாலம் பாதிக்கப்படாமல் அமைக்கப்பட வேண்டும்
தமிழகம், தமிழ்நாடு என்ற விவகாரத்தை பெரிதாக்கி, மொழி ரீதியான பதற்றத்தை உருவாக்க முனைந்த தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு கண்டனத்தையும், அண்ணா முதல்வராக பொறுப்பேற்றவுடன், சென்னை ராஜ்ஜியம் என்கின்ற பெயரை மாற்றி 'தமிழகம்' என்று பெயரிடலாமா? என்ற சர்ச்சை எழுந்த போது, டெல்லியிலே இருந்தவர்கள் 'தமிழகம்' என்று சொன்னால் எங்களால் சொல்ல அவ்வளவு சுலபமாக இருக்காது.
எனவே 'தமிழ்நாடு' என்றே இருக்கட்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கேற்ப, அண்ணா, 'தமிழ்நாடு' என்கின்ற பெயரை சூட்டி கொண்டாடி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்" என்று கருணாநிதி எழுதியுள்ள பாரதி பதிப்பகத்தின், ஒளி படைத்த கண்ணினாய் வா வா புத்தகத்தில் பக்கம் எண் 100-ல் குறிப்பிட்டுள்ள நிலையில், தமிழகம்-தமிழ்நாடு என்ற தேவையற்ற சர்ச்சையை கிளப்பி நாடகமாடி கொண்டிருக்கிறது தி.மு.க-வும், அதன் தோழமை கட்சிகளும்.
தமிழக விவசாயிகளையும் நெசவாளர்களையும் வஞ்சிக்கும் தி.மு.க அரசைக் கண்டித்தும், தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது எனவும், புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராம பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு தமிழக தி.மு.க அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு, அவற்றை ஒன்றியம் பகுதி வாரியாக விளக்கவும், அதை வலியுறுத்தி தமிழக பாஜக தலைவரின் நடைபயணம் மேற்கொள்ளத் திட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழக பா.ஜ.க செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.