பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நட்டா வெள்ளிக்கிழமை (மார்ச் 11) கிருஷ்ணகிரி வந்திருந்தார். அவர் நேரடியாக பாஜக கட்சி மாவட்ட அலுவலகத்தை திறந்துவைத்தார்.
இதையடுத்து மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை விழா மேடையில் பேசுகையில், “தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்ததுபோல், திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், தேனி, தர்மபுரி, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்ட அலுவலகங்களும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
எந்தக் கட்சியும் இதுபோன்று 10 அலுவலகங்களை திறந்தது இல்லை. தமிழ்நாடு பாஜகவை பொறுத்தவரை தொண்டர்களின் ஆலயமாக கட்சி அலுவலகங்கள் உள்ளன.
நாட்டில் உள்ள மாவட்டங்கள் தோறும் கட்சி அலுவலகங்கள் திறக்க வேண்டும் என்று அமித் ஷா நினைத்தார். தற்போது அது நிறைவேறி வருகிறது.
இந்தத் தருணத்தில் நாம் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் இருவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன்.
இந்த இடங்களை வாங்க எல்.முருகன் பணிகளை துரிதப்படுத்தினார். அவருக்கு முன்பு தலைவராக இருந்த தற்போதைய தெலங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் இந்தப் பணியை வேகப்படுத்தினார்கள்.
அவர்களின் உழைப்பு இன்று கட்டிடமாக உயர்ந்து உள்ளது. இன்று பாஜக கட்சி தமிழ்நாட்டில் தனி முத்திரையை பதித்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான்.
நாம் மக்களின் குரலாக ஒலிக்கிறோம். அநீதியை தட்டிக் கேட்கிறோம். இதனால் சிறைக்கு கூட செல்கிறோம். மீண்டும் வருகிறோம், அநீதியை தட்டிக் கேட்கிறோம்.
தி.மு.க.வின் 23 மாத ஆட்சியை நாம் பார்த்து வருகிறோம். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அடுத்த 12 மாதங்களில் மக்களவை தேர்தல் வருகிறது.
இந்தத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “மக்களின் அன்பை வாக்குகளாக மாற்றி நம் எம்.பி.க்களை பாராளுமன்றத்தை அனுப்புவோம். 39 எம்.பி.க்களும் செல்வார்கள். குரல் கொடுப்பார்கள்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/