பா.ஜ.க-வின் விளையாட்டுப் பிரிவு நிர்வாகி அலிஷா அப்துல்லா, திருச்சி சூர்யா தன்னுடைய அலுவலகத்துக்கு வந்து பா.ஜ.க மூத்த தலைவர்களை தரக்குறைவாகப் பேசினார் என்றும் தன்னை அவர் பாடி ஷேமிங் செய்தார் என்றும் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா இன்று (டிசம்பர் 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நான் பாஜகவில் சேர்ந்ததற்கு காரணம் அண்ணாமலை தான். பா.ஜ.க-வில் எனக்கு ஒரு பெரிய இடம் கொடுத்தார்கள். 2-3 நாளைக்கு முன்னாடி, திருச்சி சூர்யா ஒரு நேர்காணலில், என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் பி.ஜே.பி பற்றியும் கேவலமாகப் பேசியிருக்கிறார். பா.ஜ.க-வில் நான் செப்டம்பர் 5ம் தேதி சேர்ந்தேன். நான் பாஜகவில் சேர்ந்து 10 நாட்கள் கழித்து திருச்சி சூர்யா எனக்கு போன் செய்தார். நான் திருச்சி சூர்யா என அறிமுகப்படுத்திக் கொண்டு அவரைப் பற்றி பேசினார். நான் அவரிடம் யார் உங்களுக்கு என் செல்போன் நம்பரை கொடுத்தார்கள் எனக் கேட்டேன். தலைவர்தான் (அண்ணாமலை) தான் நம்பர் கொடுத்தார் எனச் சொன்னார். நீங்கள் கட்சியில் புதிதாக சேர்ந்துள்ளீர்கள் என்பதால் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக நம்பர் கொடுத்தார் எனக் கூறினார்.
நான் போனைக் கட் பண்ணிவிட்டேன். அவர் 2 - 3 முறை போன் பண்ணார். பிறகு போனை எடுத்தேன். உங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதால்தான் நான் வற்புறுத்துகிறேன் என்று கூறினார்.
நான் போனில் பேச முடியாது. நேரில் அலுவலகத்திற்கு வாருங்கள் எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். காலை 11 மணியளவில் அலுவலகம் வந்தார். அதன் பிறகு, அவர் தற்பெருமை பேச ஆரம்பித்து விட்டார். காதுல ரத்தம் தான் வரல.. அவ்வளவு பேசினார்.
பிறகு, நீங்கள் எதற்கு வந்தீர்கள் அதைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர், நீங்கள் விளையாட்டுப் பிரிவில் இருக்க வேண்டாம். பெண்கள் நலன், இல்லையென்றால், சிறுபான்மையினர் நலப் பிரிவிற்கு வாருங்கள். தலைவர்தான் (அண்ணாமலை) சொன்னார். ஏனென்றால், அமர் பிரசாத் அண்ணாவை ரொம்ப தவறாகப் பேசினார் திருச்சி சூர்யா.
அதற்குப் பிறகு, அப்புறம் என்னங்க என்று கேட்டேன். அதற்கு அவர் திடீரென நீங்க சாரி கட்டிய விதம் சரியில்லை. ஜிம்முக்கு ஷார்ட்ஸ் போடக் கூடாது. சீனியர் தலைவர்கள் தப்பா பேசுவார்கள் என்று கூறினார். பிறகு, என்னை பாடி ஷேமிங் செய்தார். என்னுடைய வயிறு, உடல் அங்கங்கள் பற்றி தவறாகப் பேசினார். உடனடியாக நான் அவர நீன்க்கள் கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டேன். அவர் சென்ற பின், உடனடியாக நான் அண்ணாமலைக்கு இது குறித்த குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் நான் யாரையும் அனுப்பவில்லை, தயவுசெய்து இதை நம்பாதீர்கள் எனக் கூறினார்.
திருச்சி சூர்யா என்னை பாடி ஷேமிங் செய்ததை எல்லாத்தையும் கட்சியின் விதிமுறைப்படி அமர்பிரசாத் ரெட்டியிடம் சொல்லிவிட்டேன். நான் சொன்ன அனைத்தையும் அமர் அண்ணாமலையிடம் கூறினார்.
என் அலுவலகத்தில் 23 கேமராக்கள் இருக்கிறது. இது சிசிடிவி கேமராக்கள். அது ஹனி ட்ராப் இல்லை. நான் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை. பா.ஜ.க தலைவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார். அனைத்திற்கும் ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால், அதை வெளியிடுவதற்கு நான் மோசமானவள் இல்லை” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"