ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற பாடுபடுவோம் என்று பா.ஜ.க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.க-வின் எஸ்சி பிரிவு பொதுச் செயலாளர் தி.மு.க-வில் இணைந்துளார். மேலும், அவர் ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி பெற பாடுபடுவேன் என்று சூளுரைத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஈரோடு இடைத் தேதலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாலர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க சார்பில், தென்னரசு போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியான பா.ஜ.க ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து வெற்றிக்காக பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழக பா.ஜ.க-வின் எஸ்சி பிரிவு பொதுச் செயலாளர் என். விநாயகமூர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் திங்கள்கிழமை இணைந்தார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவேன் என்றும் ஈரோடு வெற்றியை முதல்வர் ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்பேன் என்று சூளுரைத்துள்ளார்.
தி.மு.க-வில் இணைந்த என். விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற பாடுபடுவேன். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 35,000-க்கு மேல் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர் வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் மு.க. ஸ்டாலின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாக்களிப்பார்கள். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய தொகுதி முழுவதும் பயணம் செய்வேன். வெற்றி பெற்ற பின், அந்த வெற்றியை ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி, பட்டியல் இன இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியதை நினைவு கூர்ந்த விநாயகமூர்த்தி, இதனால் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி படித்து அரசு வேலை பெற்றுள்ளனர் என்று விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"