பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் கு. அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற கருப்பொருளில் மாநிலம் தழுவிய பாதயாத்திரையை தொடர உள்ளார். இந்தப் பாதயாத்திரை நிகழ்வானது இராமநாதபுரத்தில் தொடங்கி, மதுரை விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி வழியாக முதல்கட்டமாக கன்னியாகுமரி வந்தடைகிறது.
இந்தப் பாத யாத்திரையை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைப்பார் என்று தெரிகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் இன்று வடசேரி, கோட்டார், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, மாவட்டத் தலைவர் தர்ம ராஜ், பொருளாளர் முத்து ராமன், மீனா தேவ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். மேலும் யாத்திரை பொறுப்பாளர்கள் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் நரேந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
அண்ணாமலை தனது பாத யாத்திரையின் ஒருபகுதியாக ஆகஸ்ட் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இவர் ராதாபுரம் தாலுகா வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழைய உள்ளார். அப்போது கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“