சென்னைக்கு பாதுகாப்புத்துறை கண்காட்சியில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். செயற்குழு கூட்டத்தில் மாநிலங்களவை எம்பி கனிமொழி கொடுத்த ஆலோசனை ஏற்று போராட்டத்தை அறிவித்துள்ளார், ஸ்டாலின்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைத் தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் கொந்தளிப்பில் உள்ளன. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பெருமபாலான செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர்களான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர், ‘நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினமா செய்ய சொல்வது சரியான கருத்து அல்ல என்று நினைக்கிறோம். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் மட்டுமே நம்மால் வலுவாக போராட முடியும்’ என்பதை வலியுறுத்திப் பேசினர். இதை ஆதரித்து எம்.எல்.ஏ.க்கள் சிலரும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் பேசினார்கள்.
கனிமொழி எம்பி பேசும் போது, ‘‘பிரதமர் மோடி வரும் 15ம் தேதி பாதுகாப்புத்துறை கண்காட்சியில் கலந்து கொள்ள சென்னை வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய பிரதம் மோடி, சென்னை வரும் போது நாம் என்ன செய்ய போகிறோம். நம்முடைய எதிர்ப்பை காட்டும் விதமாக, கருப்புக் கொடியாவது காட்ட வேண்டும். என்ன போராட்டம் என்பதை செயல் தலைவர் அறிவித்தால், நாங்கள் அதனை செய்ய காத்திருக்கிறோம்’’ என்றார்.
செயற்குழு கூட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அவர்களின் ஆலோசனையையும் கேட்கலாம். ஏப்ரல் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதே நாளில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். இந்த தகவல் கூட்ட அரங்கில் இருப்பவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
செயற்குழு கூட்டம் முடிந்ததும் கூட்ட அரங்கைவிட்டு வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் பேசினார். அப்போது, ‘‘வரும் 15ம் தேதி பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழகம் வருவதாக செய்தி கிடைத்துள்ளது. அப்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை திமுக நடத்த தீர்மானித்துள்ளது. கடைசி வரையில் சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ்., பொருமையாக இருங்கள். 29ம் தேதிக்குள் நல்ல முடிவு வரும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். இப்போது உண்ணாவிரதம் அறிவித்திருப்பது ஒரு நாடகம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல. நேற்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள். காலை முதல் மாலை வரையில் நடந்ததாக செய்திகள் வந்திருக்கு. அமைச்சரவை கூட்டத்தில் என்ன பேசினார்கள்? என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறதா என்றால் இல்லை. இப்போது கூட கெட்டுப் போகவில்லை. அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாம். அதற்கு அவர்களிடம் தெம்பு இல்லை. திராணி இல்லை. அந்த குறைந்த பட்ச நாகரிகம் கூட அவர்களுக்கு இல்லை. ஏனென்றால், ஊழல் செய்து கொள்ளையடுத்து கொண்டிருக்கும் இந்த ஆட்சி பறி போய்விடக் கூடாது என்பதுதான். அதிமுகவில் இருக்கும் எம்.பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள் என்றால், எங்கள் எம்பிக்களும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறார்கள். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால், திமுகவின் 89 எம்.எல்.ஏ.க்களும் அடுத்த நிமிடமே ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.