தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோவாவில் உள்ள தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரூ.8.25 கோடி மதிப்பில் அதிநவீன 2 சுற்றுலாப் படகுகள் வாங்கப்பட்டது. அதன் பின்னர் வெள்ளோட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அண்மையில் கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையில் சொகுசு படகு சேவை தொடங்கப்பட்டது. கடந்த 24ம் தேதி பொது பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே, விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூவர் சிலை ஆகிய இடங்களுக்கு படகு சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த (மே28) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் கன்னியாகுமரி - வட்டக்கோட்டை வரையிலான படகு சேவையில் பயணிகள் பாதுகாப்பு உடை அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததாக செய்தி வெளியானது. இதையடுத்து இன்று (மே 29) வட்டக்கோட்டை சொகுசு படகு, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை செல்லும் படகுகள் என அனைத்து படகு சேவைகளில் பயணிக்கு பயனர்கள் கட்டாயம் பாதுகாப்பு உடை அணிந்து பயணிக்க வேண்டும் என ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்டை மாநிலமான கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“