காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதையடுத்து சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே காவிரியில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் - ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, ஈரோடு நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளை இணைக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணை மூலம் மின்சார உற்பத்தியும் நடக்கிறது. இந்த இரு மாவட்டங்களுக்கும் இடையிலான விசைப்படகு போக்குவரத்து மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் இரு மாவட்டங்களுக்கும் சென்று வருகின்றனர். அதேபோல், வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் விசைப்படகில் சவாரி செய்து பொழுதை கழிப்பதும் உண்டு.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1.70 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனவே, பூலாம்பட்டி பகுதியில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் செயல்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 29-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் 8 கிமீ. தூரம் சுற்றி சென்று வந்தனர்.
இந்நிலையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்துக்கு மட்டும் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைந்ததால், சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையிலான விசைப்படகு போக்குவரத்து தொடங்க பேரூராட்சி அதிகாரிகள் அனுமதியளித்தனர். இதையடுத்து, பூலாம்பட்டி - நெரிஞ்சிப்பேட்டை இடையே மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“