இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பைப் வெடிகுண்டு மூலம் மதுரை விமான நிலையத்தை தகர்த்து, ஆட்களை கொல்லப்போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு நேற்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த விமான நிலையங்களின் இ-மெயில் முகவரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. சென்னை விமான நிலையத்தில் கழிவறை, ஓய்வறை பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடிக்கும் என்று அந்த இ-மெயிலில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து விமான நிலைய உயர் அதிகாரிகள் உயர்மட்ட பாதுகாப்புஆலோசனை கூட்டத்தை நடத்தினர். விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய போலீசார், விமான நிறுவன பாதுகாப்பு படை, ஆணையக பாதுகாப்பு அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையங்கள் முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் இந்த எந்த விமான நிலையங்களிலும் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தால் விமான நிலையங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மதுரையில் பைப் வெடிகுண்டு மூலம் விமான நிலையத்தை தகர்ப்பதாக வந்த மிரட்டலை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். மதுரை மாநகர காவல் ஆணையருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள், பயணிகள் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக விமான நிலையங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வருவது விமான பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“