சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை.
அண்மையில் சென்னை பள்ளி, கோயில்களுக்கு அடையாளம் தெரியாத இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 8-ம் தேதி சென்னையிலுள்ள 13 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர். பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சந்தேகத்திற்குரிய எந்தபொருளும் கைப்பற்றப்பட வில்லை .
இதே போல் சென்னை கோயிலுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரிக்கு இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் இதுகுறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“