கோவை வடவள்ளியை அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.பி.பி பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் கடந்த வெள்ளிக் கிழமை மிரட்டல் வந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பள்ளி நிர்வாகம் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தது.
மேலும் பெற்றோர்களும் பதற்றத்துடன் வந்து அவர்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே வடவள்ளி போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பள்ளி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு சென்றனர்.
அன்றைய தினம் சென்னையில் இயங்கி வரும் பி.எஸ்.பி.பி (PSBB) பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றும் (மார்ச் 4) கோவை சோமையம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் பி.எஸ்.பி.பி பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இரவு 2 மணியளவில் மிரட்டல் வந்த நிலையில் உடனடியாக அங்கு வந்த போலீசார் பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் சந்தேகிக்கப்படும் பொருட்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே இன்று பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“