மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்!

மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை நடத்தினர்.

மு.க.ஸ்டாலினின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. சென்னை காவல்துறை ஆணையரகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்ட மர்மநபர், ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வீசப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்டாலின் வசிக்கும் ஆழ்வார்பேட்டை வீடு மற்றும் கருணாநிதி வசிக்கும் கோபாலபுரம் வீடுகளில் நள்ளிரவில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்தனர். வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என போலீசார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மர்ம நபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

×Close
×Close