chennai | போபால், கோவா, நாக்பூர், கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, டெல்லியின் ஷாஹ்தராவில் அமைந்துள்ள சாச்சா நேரு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.30,2024) காலை வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சல் வந்தது.
காலை 10 மணியளவில் மின்னஞ்சலைப் பெற்ற ஒரு ஊழியர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறிதல் குழு, வெடிகுண்டு செயலிழக்கும் படை, டெல்லி தீயணைப்பு சேவையின் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க முகவர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, வளாகம் வெளியேற்றப்பட்டு, தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் உறுதி செய்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற அச்சுறுத்தல்களின் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு வந்துள்ளது.
திங்களன்று, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ராஜா போஜ் சர்வதேச விமான நிலையத்துக்கும் இதேபோன்ற மிரட்டல் மின்னஞ்சல் வந்தது.
"666darktriad666@gmail.com" என்ற முகவரியிலிருந்து காலை 9:27 மணிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
அதே நாளில், கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையத்திற்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மேலும், தபோலிம் விமான நிலைய இயக்குநர் எஸ்விடி தனம்ஜெய ராவ் கூறுகையில், மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்த போதிலும், விமானச் செயல்பாடுகள் இடையூறு இல்லாமல் தொடர்ந்தன” என்றார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சென்னை மருத்துவமனைக்கு வந்த இமெயில் வைத்து விசாரணை நடத்தினர்.
நாடுமுழுவதும் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இமெயில் மூலமாக ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“