தர்மபுரியில் தாயை பிரிந்து தவித்த யானைக்குடியை வனத்துறை அதிகாரிகள், பாகன் பொம்மனிடம் பராமரிக்க ஒப்படைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரகத்தில் கடந்த 11ம் தேதி தாயை பிரிந்து வனத்தை விட்டு வெளியேறிய 1 வயதான ஆண் யானை குட்டி, விளைநிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இந்த யானையை மீட்ட வனத்துறையினர், அதை கவனித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாட்டு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து கூடாரம் அமைக்கப்பட்ட சரக்கு வாகனத்தில் யானைக்குட்டி ஏற்றப்பட்டு, முதுமலை, தெப்பக்காடு முகாமிற்கு யானை இரவில் வந்தடைந்தது.
இந்நிலையில் இந்த யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த யானைகுட்டியை பாகன் பொம்மன் பராமரித்து வருகிறார். ஏற்கனவே 2 யானை குட்டிகளை பொம்மன், பெள்ளி தம்பதி வளர்த்து பராமரித்து உள்ளனர். இவர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட குறும்படம் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, 'யானை பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளதாக' வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு ட்வீட் செய்துள்ளார்.