ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அத்தொகுதியில் உள்ள 90 சதவீத வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொக்தியில் தற்போதைக்கு 2.28 லட்ச வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், வாக்காளர் புகைப்பட சீட்டு கிடைக்கப் பெறாதவர்களுக்கு வாக்குச் சாவடியிலேயே அதனை பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்காக, வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் வகையில் ஏதேனும் ஆவணத்தை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அத்தொகுதியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்களர் குறித்த தகவல்களை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனால், இறந்தவர்கள், வேறிடத்துக்கு சென்றவர்கள் என பல்வேறு காரணங்களுக்காக பலரது பெயர்கள் நீக்கப்பட்டன.
ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைவதால், வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பணியாளர்கள், அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதோர் மாலை 5 மணிக்கு மேல் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை அரசியல் கட்சிகளின் 83 வாகனங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 120 தனிநபர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ள ஓட்டு ஓடுவதை தடுக்கும் வகையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலகம் தொகுத்துள்ளது.